சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலான மழை

28 August 2021

தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு பரவலாக மழை பெய்தது.

 
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், கோவை, தேனி, நீலகிரியில் இருநாட்களுக்கு அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில் வளசரவாக்கம், ராமாபுரம், ஈக்காட்டுதாங்கல், கிண்டி, நந்தம்பாக்கம், போரூர், ஐயப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.


காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதியான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

 திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தெய்யார், செம்பூர், பொன்னூர், பாதிரி, சளுக்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் திடீரென குளிர்ந்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஆம்பூர் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் கொட்டும் மழையில் மழைநீரை அப்புறப்படுத்தினர்.