டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் படைப்புகளை மீண்டும் சேர்த்திட கோரிக்கை.

27 August 2021

எழுத்துகளைக் கட்சி, அரசியல், மதவாத கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தை கைவிட்டு, டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளை மீண்டும் சேர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

''டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமாவின் சங்கதி, தமிழ்க் கவிஞர் சுகிர்தராணியின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகளை அந்தத் துறை பேராசியர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லாமலேயே, மேற்பார்வைக் குழுவின் ஆலோசனையின் பெயரில் பல்கலைக்கழக நிர்வாகம் நீக்கியிருப்பது ஒருதலைபட்சமான முடிவு. இது எவ்வகையிலும் ஏற்க முடியாத செயலாகும்.

பெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா, கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் எழுத்துகளைக் கட்சி அரசியல், மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட்டு, அவற்றை டெல்லி பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்த்திட வேண்டும் எனப் பல்கலைக்கழக நிர்வாகத்தையும் ஒன்றிய அரசையும் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதேபோல மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், பாமா, சுகிர்தராணி, மகாஸ்வேதா தேவியின் படைப்புகள் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், மறுபடியும் சேர்க்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். பெண்கள், பட்டியலின மக்களுக்கு எதிரான பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அழித்தொழிப்பு நடவடிக்கை இது என்று, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார். இதேபோல், ஈராயிரம் ஆண்டு தமிழ் மரபைப் போற்ற வேண்டும். பாதுகாக்க வேண்டும். மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என அதிமுக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பாடத்திட்டங்களை நீக்கிய டெல்லி பல்கலைக்கழகத்தின் மேற்பார்வைக் குழுவானது நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட்டது என்றும், கடந்த ஆறு ஆண்டுகளாக சிறப்பான முறையில் பாரபட்சமின்றி செயல்பட்டு வருவதாகவும் அக்குழுவைச் சேர்ந்தவர்கள் விளக்கமளித்துள்ளனர்