கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம்

02 July 2022

*கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம்*

கிருஷ்ணகிரி போலுப்பள்ளியில் அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இந்த மருத்துவக்கல்லூரியின் முதல்வராக (டீன்) அசோகன் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றுக் கொண்டார். நேற்று முன்தினம் அவர் பணி ஓய்வு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில் அவர் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த போது கூறியதாவது:-

கடந்த 2020-ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் அசோகன் முதல்வராக இருந்தார். அப்போது மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாக டாக்டர் அசோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓய்வு பெறும் நாளில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் மருத்துவ கல்லூரி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.