ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்தது; தலிபான்கள் அறிவிப்பு

17 August 2021


ஆப்கானிஸ்தானில் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரப்புர்வமாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக உள்நாட்டு அரசுக்கும் தலிபான் அமைப்புக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்க ராணுவத்தினர் பல வருடங்களாக ஆப்கானில் முகாமிட்டு அரசுப்படைக்கு ஆதராவாக இருந்து வந்தனர். இந்நிலையில், ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றப்பின் ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் விலக்கிக்கொள்ளப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து படிப்படியாக படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனால், தலிபான்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி கடந்த சில நாட்களாக ஆப்கானின் முக்கிய நகரங்களை கைப்பற்றின. நேற்று தலைநகர் காபூலையும் கைப்பற்றினர். முன்னதாக தலிபான்கள் காபூலை நெருங்கும்போதே அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறினார். மேலும் துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி போஸ்ட் ஒன்றை பதிவிட்டார். அதில், போரில் மக்களின் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன். 20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன். மக்கள்தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன். நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலிபான்கள்தான் பொறுப்பு” என பதிவிட்டார்.

இதனிடையே அமெரிக்காவில் ஆப்கானில் இருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபர் மாளிகை முன் ஜோ பைடனுக்கு எதிராக மக்கள் கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகைக்குள் நுழைந்த தலிபான்கள் போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்துள்ளனர்.