ஆப்கானிஸ்தான் தலைநகரை கைப்பற்றிய தலிபான்கள்; இங்கிலாந்து பிரதமர் கருத்து

16 August 2021


தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பாற்றுவார்கள் என எதிர்பார்த்ததாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். 


ஆப்கானிஸ்தானில், அரசு படைகளுக்கும் தலிபான்களுக்கும் பல வருடங்களாக போர் நடந்துவருகிறது. அமெரிக்காவில், இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதை அடுத்து ஆப்கானுக்குள் வந்த அமெரிக்க ராணுவம், கடந்த 20 ஆண்டுகளாக தலிபானுக்கு எதிராகப் போரிட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க ராணுவம் இப்போது வெளியேறி வருகிறது.

இதனால் அரசு படைகளுக்கு எதிராக போரிட்டு பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிய தலிபான்கள், அவற்றைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள்ளும் அவர்கள் நுழைந்துவிட்டனர்.

இதையடுத்து அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி, தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் தஜிகிஸ்தான் சென்றுள்ளதாகவும் துணை அதிபர் அம்ருல்லாவும் காபூலைவிட்டு வெளியேறி விட்டதாகவும் இடைக்கால அதிபராக அலி அமகது ஜலாலி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது ஆப்கானிஸ்தான் இவ்வளவு சீக்கிரமாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் செல்லும் என நீங்கள் எதிர்பார்த்தீர்களா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பாற்றுவார்கள் என்பது தெரிந்ததுதான். தற்போது அமெரிக்கா தனது படைகளை விலக்கி கொண்டுள்ளதால் அது விரைவாக நடந்து விட்டதாகவும் கூறினார். மேலும், ஆப்கானிஸ்தானில் விரைவில் தலிபான்கள் தலைமையில் புதிய அரசாங்கம் அமையும் அல்லது அதிகாரப்பங்கீடு ஏற்படும் என தெரிவித்தார்.