திட்டமிட்டபடி செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்

04 September 2021

கங்கனா ரனாவத் நடித்துள்ள தலைவி திரைப்படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 

விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்துள்ள திரைப்படம் தலைவி.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தலைவி திரைப்படத்தை செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியிடுவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.  அதேசமயம் திரையரங்குகளில் வெளியாகி 15 நாட்களில் ஓ.டி.டி யில் வெளியிடவும் உரிமை வழங்கி இருந்தது. 

ஆனால் தயாரிப்பு நிறுவனத்தின் இந்த முடிவிற்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  மேலும் திரையரங்கில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓ.டி.டி யில் அந்த திரைப்படம் வெளியாகும் என்ற கடிதம் வழங்கினால்தான் தலைவி திரைப்படத்தை திரையரங்கில் திரையிடுவோம் என்று கூறினர். இதற்கான பேச்சுவார்த்தை கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.  இதன் காரணமாக செப்டம்பர் 10-ஆம் தேதி தலைவி திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகிறது.