இம்மாதம் வெளியாகும் 'விஜய் 66' படத்தின் அறிவிப்பு

04 September 2021

நடிகர் விஜய்யின் ‘விஜய் 66’ படத்தின் அறிவிப்பு இம்மாதம் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் நான்காம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை, பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். வம்சி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான பிரபாஸின் ’முன்னா’ படத்தை தில் ராஜுதான் தயாரித்தார்.

அதோடு, வம்சி இயக்கத்தில் வெளியான ராம் சரண் - அல்லு அர்ஜுனின் ‘யுவடு’ படத்தையும், மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ படத்தையும் தில் ராஜுதான் தயாரித்தார். இந்த நிலையில், வம்சி இயக்கும் விஜய் படத்தையும் தில் ராஜுதான் தயாரிக்கிறார். இந்த நிலையில், இம்மாதம் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் பாடல் வெளியாகிறது என்றும் ‘விஜய் 66’ படத்தின் அறிவிப்பும் இம்மாதமே வெளியாகிறது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.