தமிழகத்தில் இன்று மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது

27 January 2022

2021-2022ம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்றுமுதல் தொடங்கியது. தமிழ் நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 4,349 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2,650 எம்பிபிஎஸ் இடங்கள் என மொத்தம் 6,999 எம்பிபிஎஸ் இடங்களும், அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 1,930 பிடிஎஸ் படிப்புகளுக்கான இடங்களும் உள்ளன.


அந்த வகையில் 6,999 எம்பிபிஎஸ் மற்றும் ஆயிரத்து 930 பிடிஎஸ் இடங்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று மாற்று திறனாளி மாணவ மாணவியர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவு மாற்றுத்திறனாளிகள் ,ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் கலந்து கொள்கின்றனர். நாளை மற்றும் நாளை மறுதினம் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி தொடங்க உள்ளது.