தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை : ஆளுநர் உரைக்கு ஆசிரியர் மன்றம் பாராட்டு !

24 June 2021


தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற ஆளுநரின் உரைக்கு ஆசிரியர் மன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா. சண்முகநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

     16 வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் திங்கட்கிழமை நடைபெற்றது . இதில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். அவரது உரையில் பல நல்ல திட்டங்களும், அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசுப்பள்ளிகளில் பயின்றவர்களுக்கும், அரசு பதவிகளுக்கான வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுப்பதை இந்த அரசு உறுதி செய்யும் என்ற ஆளுநர் அறிவிப்பை வரவேற்கிறோம்.

     அதேபோல் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பதற்கு உயர் முக்கியத்துவம் கொடுக்கப்படும். வேலைவாய்ப்புகளில் பெண்களின் பங்களிப்பை அதிக அளவில் ஊக்குவிக்கும் பொருட்டு பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் மாவட்டம் தோறும் நிறுவப்படும் என்ற அறிவிப்பையும் வரவேற்கிறோம். மேலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்க தேவையான சட்டங்களை நிறைவேற்ற அத்தகைய சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற உரிய நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்றும் , அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதற்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும். குழந்தைகள் தொடர்ந்து கல்வி கற்பதை உறுதி செய்ய ஓர் இலக்கு சார் திட்டம் செயல்படுத்தப்படும் . பெருந்தொற்று காலத்தின்போது ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படும் என்ற ஆளுநரின் அறிவிப்பை வரவேற்று பாராட்டுகிறோம். இவ்வாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச்செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.

நிருபர் மீனா திருவாரூர்