பாரதிதாசன் பல்கலைக்கழக ஸ்போர்ட்ஸ் போர்டு ஊழல்கள் மற்றும் விளையாட்டு மாணவர்களுக்கு இளைத்த துரோகங்கள் சிபிஐ விசாரிக்க வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை

14 June 2021தமிழகத்தில் தற்போதைய திமுக அரசு மிக சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருவது அனைவரும் அறிந்த விஷயமே ! இதற்கு சாட்சி பொதுமக்கள் மட்டுமல்ல மாணவச் செல்வங்களும், விளையாட்டு மாணவர்களும் அறிந்துள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைக் குழு அமைத்து அந்தந்த துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகின்றது. அதிலும் உயர்கல்வித் துறையில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் மீண்டும் தேர்வு எழுத விருப்பப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பை கொடுத்துள்ளது. இவை தமிழகத்தில் உள்ள பொறியியல் துறை மாணவர்களிடையே மிகவும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் 1982 ல் அப்போதைய திருச்சி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டுக் குழு (sports board) மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று, இந்த பல்கலைக்கழகத்தில் இணைப்புக் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்திலும் படித்து முடித்த விளையாட்டு வீரர்கள் மற்றும் படித்துக்கொண்டிருக்கும் விளையாட்டு வீரர்கள் என்று ஏராளமானோர் கடும் கண்டனத்தை பல்கலைக்கழகத்திற்கு எதிராக தெரிவித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள விளையாட்டுக் குழு (sports board) கடந்த ஏழு ஆண்டுகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமல், அதற்கு பதில் பலவிதப் முறைகேடுகள் தான் நடைபெற்றுள்ளன. இந்த பல்கலைக்கழகமான பாரதிதாசன் பல்கலைக்கழகம் முன்னொரு காலத்தில், இந்திய அளவில் விளையாட்டு போட்டிகளில் சிறந்த முறையில் மாணவர்கள் திகழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 107 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் வருடா வருடம், முதலாமாண்டு மாணவர்களிடம் இருந்து பெறப்படும், விளையாட்டு சிறப்பு நிதி, 30 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக் கழகத்திற்கு ரூ 300 வீதம், செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் ஆண்டிற்கு ரூ 90 லட்சம் விளையாட்டு நிதியாக ஏழை-எளிய மாணவர்களிடம் இருந்து பெறப்படுகின்றது. இந்தத் தொகை முறையாக விளையாட்டில் பங்கு பெறும் மாணவர்களுக்கு செலவு செய்வதில்லை. இந்த பணத்தை கொண்டு, பல்கலைக்கழகத்தில் மற்ற நிர்வாக வளர்ச்சிக்காக, செலவு செய்யப்பட்டு வருகின்றது. தமிழக அரசு விளையாட்டு, சர்வதேச, தேசிய, பல்கலைக்கழகம் மற்றும் மாநில அளவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுத்து சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக விளையாட்டு போட்டிக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு முறையாக பயணப்படி, தினப்படி (T A, D A), தருவதும் கிடையாது. பல்கலைக் கழகம் சார்பாக, விளையாட்டுப் போட்டியில் பங்கு பெறும் மாணவ மாணவிகளுக்கு, விளையாட்டு பயிற்சி முகாம் கூட சரியாக நடத்துவதில்லை. அதுமட்டுமில்லாமல், பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கிடையே நடைபெறும் விளையாட்டு போட்டிகளில், விளையாட்டு மாணவர்களை சரியாக ஊக்கப் படுத்துவது கிடையாது. மேலும் சரியாக நடத்துவதும் கிடையாது. எடுத்துக் காட்டாக, தமிழ்நாட்டில் உள்ள அரசு அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்போர்ட்ஸ் போர்டு மிக சிறப்பான முறையில் செயல்பட்டு வருகின்றது. அந்தப் பல்கலைக் கழகத்திற்கு, மாணவர்களிடையே இருந்து பெறப்படும் விளையாட்டு சிறப்பு நிதி முழுவதுமே, மாணவர்களுக்கும், அந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டுப்போட்டிகளுக்கும் மற்றும் பல்கலைக் கழகம் சார்பாக பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு, சிறப்பான முறையில் அந்த நிதி செலவு செய்யப்பட்டு வருகின்றது. அந்த பல்கலைக்கழகத்தில் ஜிபி ( GB ) மீட்டிங் நடைபெறும் பொழுது ஜோனல் வைஸ் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு எவ்வளவு தொகை, எந்தந்த போட்டிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்று சரியாக முடிவு செய்யப்பட்டு வருகின்றது. ஆனால் அரசு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஸ்போர்ட்ஸ் போர்டில் வெளிப்படைத் தன்மை கிடையாது. நாங்கள் கட்டும் விளையாட்டு சிறப்பு நிதி முழுவதும் எங்களுக்கு பெயரளவிற்கு மட்டும்தான் செலவு செய்யப்படுகின்றது. மீதி பணம் எங்கு செல்கின்றது என்று எங்களுக்கு தெரியவில்லை என்று முன்னாள் மற்றும் இந்நாள் விளையாட்டு மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், பாரதிதாசன் பல்கலைக் கழகத்திற்கு, விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறும், மாணவ, மாணவிகளை முறையாக தேர்வு செய்வது கிடையாது. இந்த விஷயத்திலும் பல முறைகேடுகள் நடந்துள்ளன. 
தமிழ்நாட்டில் உள்ள மற்ற அரசு பல்கலைக் கழகத்தில் உள்ளது போல், தகுதி வாய்ந்த உடற்கல்வி இயக்குனர்களை ஒரு குழுவாக அமைத்து, திறமையான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். முன்னாள் குத்துச்சண்டை மாணவி ஒருவர் கூறும்பொழுது, பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக விளையாடுவதற்கு எங்களை அழைத்துச் செல்வது கிடையாது. இதனால், நான், பத்து வருடங்களாக, பயிற்சி செய்து வெற்றி பெற்றும் எனக்கு எந்தவித பயனும் கிடையாது. இதனால், என்னுடைய, வேலைவாய்ப்பும் பறிபோய் உள்ளது. பாரதிதாசன் பல்கலைக் கழகம் ஆனது, விளையாட்டு மாணவர்களின் நலன் கருதாமல், அவர்களாகவே முடிவு செய்து, குறைவான விளையாட்டு போட்டிகளை மட்டும் அதுவும் கல்லூரிகளுக்கு இடையே நடத்தி முடிகின்றது. இவையெல்லாம், விளையாட்டு மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். நாங்கள் கட்டும் சிறப்பு நிதி தொகை 90 லட்சம் ரூபாயை எங்களுக்கு அதாவது விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். என்று தமிழக முதலமைச்சர், தமிழக தலைமைச் செயலாளர், உயர்கல்வித்துறை அமைச்சர், உயர்கல்வித்துறை செயலாளர் போன்றவர்களுக்கு, புகார் மனு தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள துணைவேந்தர் அவர்கள், உடனடியாக இதுகுறித்த விசாரணையை மேற்கொண்டு துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், வரும் காலங்களில் நடைபெறும் பல்கலைக்கழகத்தின் கீழ் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை சிறப்பான முறையில் நிதி ஒதுக்கி நடத்தப்படவேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் மற்றும் குளறுபடிகளையும் எப்படி தீர விசாரிக்க படுகின்றதோ அதேபோல பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஸ்போர்ட்ஸ் போர்டில் நடைபெற்ற தில்லுமுல்லு மற்றும் ஊழல்களையும், சிபிஐ விசாரணை தேவை என்றும் அம்மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், சமூக நல ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஒருமித்த கோரிக்கையாக தெரிவித்துள்ளனர். 

கடந்த 5 வருடங்களாக, பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பாக, பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெறும் தென் மண்டல மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை கூட இவர்கள் எடுத்து நடத்தியது கிடையாது.