திருவாரூர் அருகே கொற்றவை நியூஸ் எதிரொலியாக பூம் பூம் மாட்டுக்காரர்களுக்கு மாவட்ட எஸ்.பி. உணவு வழங்கினார்

15 June 2021


திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஸ்ரீவாஞ்சியம் அபிஷேகக்கட்டளை பகுதியில் 'ஆதியன்' பழங்குடியினரான 'பூம்பூம் மாட்டுக்காரர்கள் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்கள் பாரம்பரியமாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டை கொண்டு ஊர் ஊராக சுற்றி மக்களிடம் குறிசொல்லி, வேடிக்கை காட்டி யாசகம் பெற்று வாழ்ந்து. வருகிறார்கள். இவர்களில் ஆண்களின் முக்கிய தொழில் மாடுகளை பழக்கி வித்தை காட்டுவது ஆகும். பெண்கள் ஊசிமணி, வளையல், தோடு, திருஷ்டிகயிறு போன்ற பொருட்களை ஊர் ஊராக சென்று கோவில் திருவிழாக்கள், சந்தைகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் விற்று பிழைப்பு நடத்துவது ஆகும். 

இவர்கள் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாழ்வாதாரம் இழந்து பசியால் வாடி அவதிப்பட்டனர். இதுகுறித்து செய்தி கடந்த 10-ந்தேதி கொற்றவை நியூஸில் படத்துடன் வெளியானது. இதனையறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி,ஆர்.சீனிவாசன் வழக்கம்போல் தனது மனித நேய செயலால் உடனடியாக அவர்களது பசியை போக்க நடவடிக்கை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர் சீனிவாசன் பூம் பூம் மாட்டுக்காரர்கள் வசிக்கும் வசிக்கும் பகுதிக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
  
அங்கு வசிக்கும் மக்கள் கொரோனா ஊரடங்கு காலத்தில் பசியின்றி வாழ அவர்களுக்குத் தேவையான அரிசி, மளிகைபொருட்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். மேலும் ஊரடங்கு தொடரும் பட்சத்தில் அவர்களுக்கு இதேபோன்று அனைத்து உதவியையும் தொடர்ந்து செய்வதாகவும், அவர்களது அனைத்து கோரிக்கைகளையும் சம்மந்தப்பட்ட துறையினர் மூலம் நிறைவேற்ற உதவி செய்வதாகவும் கூறினார்.இதேபோல் அவர் பொறுப்பேற்ற நாள் முதல் மனித நேயத்துடன் மக்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தும் பல அறிவுரைகளைக் கூறியும் செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் மற்றும் காவல் துறையினரையும், செய்தி வெளியிட்டு உதவிய கொற்றவை நியூஸ் நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

நிருபர் மீனா திருவாரூர்