செய்யாறு - கீழ்நெல்லி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையத்தில் தேசிய வேளாண் மகளிர் தின விழா

15 October 2020

செய்யாறு அருகே கீழ்நெல்லி கிராமத்தில் வேளாண்மை அறிவியல் மையத்தில் தேசிய வேளாண் மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.  திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுகா கீழ்நெல்லி கிராமத்தில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில், தேசிய வேளாண் மகளிர் தின நிகழ்சிக்கு வேளாண்மை அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் மருத்துவர் கா.மாயகிருஷ்ணன் வரவேற்றார்.  விழாவில் தலைமையுரையாற்றிய வேளாண்மை அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி வே. சுரேஷ் விவசாயத்தில் பண்ணை மகளிரின் பங்கு தற்போதுள்ள 80 சதவிகித்தை விட மேலும் அதிகப்படுத்த அனைத்து மகளிரும் முன்வரவேண்டும் எனவும், பண்ணை மகளிர் அறிவியல் மையத்தில் நடத்தப்படும் தொழில் சார்ந்த பயிற்சியில் கலந்துகொண்டு குடும்ப வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். 

நிகழ்ச்சியின் ஒரு நிகழ்வாக விவசாயத்தில் மகளிரின் பங்கு என்ற தலைப்பில் கோலப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், 2019-20க்கான சிறந்த பெண் முன்னோடி விவசாயி லதா ராமகிருஷ்ணனுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

வேளாண்மை அறிவியல் மையத்தின் மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் த.மார்க்ரெட் பெண்கள் சரிவிகித உணவை தினசரி எடுத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார். அதற்காக பெண்கள் அனைவரும் வீட்டின் அருகில் குறைந்த அளவிலாவது ஊட்டச்சத்து காய்கறி தோட்டத்தை அமைக்க கேட்டுக்கொண்டார்.

ஊட்டச்சத்துக் காய்கறிகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கி கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துணை வேளாண்மை அலுவலர் சுப்பிரமணியன் மகளிருக்கான பல்வேறு அரசு திட்டங்கள் பற்றியும் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு அரசாங்கம் சார்பாக வழங்கப்படும் திட்டங்கள் குறித்தும்  விளக்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களைச் சார்ந்த 52 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர்; ப.நாராயணன் மற்ற துறைகளில் பெண்களுக்கான வாய்ப்புகள் குறித்தும் வருகைபுரிந்து சிறப்புரையாற்றிய அணைவருக்கும் நன்றி கூறினார்.