ட்விட்டரை விடாமல் துரத்தும் இந்தியா!

17 June 2021

உத்தர பிரதேசத்தின் காஸியாபாதில் முதியவர் தாக்கப்படுவதாக வெளியான காணொளி சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், அது தொடர்பாக ட்விட்டர், காங்கிரஸ் தலைவர்கள் சிலர், பத்திரிகையாளர்கள் மீது அம்மாநில காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நடவடிக்கை சர்ச்சையாகியிருக்கிறது.


ஏற்கெனவே இந்திய அரசு அறிமுகப்படுத்திய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு உடன்படும் விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலையீட்டை ட்விட்டர், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்கள் நாடியுள்ளன. இந்த நிலையில், அந்த விதிகளை ட்விட்டர் மீறியதாக அதன் மீது உத்தர பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் முதியவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில் அது தொடர்பான இடுகைகளை ட்விட்டரில் பகிர்ந்தவர்கள் மீதான புகாரை லோனி காவல் நிலைய உதவி ஆய்வாளரே அளித்துள்ளார்.

ஆல்ட் நியூஸ் என்ற இணையதள செய்தியாளர் மொஹம்மத் ஜுபேர், தி வயர் செய்தியாளர் ராணா ஆயுப், காங்கிரஸின் சல்மான் நிஸாமி மஸ்கூர் உஸ்மானி, ஷாமா மொஹம்மத், எழுத்தாளர் சாபா நக்வி மற்றும் ட்விட்டர் நிறுவனம், ட்விட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா நிறுவனம் ஆகியோரை குற்றம்சாட்டப்பட்டவர்களாக சேர்த்து இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.

கலவரத்தை தூண்டுதல், வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை தூண்டியது, மத உணர்வை தூண்டியது, விஷம செயல்களில் ஈடுபட்டது, குற்றச்சதி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, உத்தர பிரதேசத்தின் காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள லோனி பகுதியில் புலந்தர்ஷாவைச் சேர்ந்த 72 வயது முஸ்லிம் முதியவரான அப்துல் சமத், ஜூன் 5ஆம் தேதி தாக்கப்பட்டதாக 'திவயர்' இணையதளத்தில் செய்தி வெளியானது. இது தொடர்பான காணொளியில், அந்த முதியவரின் தாடியை மர்ம நபர்கள் மழிப்பது போன்ற காட்சி இடம்பெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக அப்துல் சமத் காவல்நிலையத்தில் ஜூன் 7ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.

அதில் தன்னை தாக்கிய நபர்கள், தன்னை பலவந்தப்படுத்தி ஜெய் ஸ்ரீராம் என உச்சரிக்கும்படி கூறியதாகவும் குறிப்பிட்ட தமது மதத்தின் காரணமாகவே தாம் தாக்கப்பட்டதாக புகாரில் அகமது சமத் கூறியிருந்தார்.

இது தொடர்பாக அப்துல் சமத் வெளியிட்ட காணொளி வைரலானது. அதில், தன்னை சிலர் ஆட்டோவில் அழைத்துச் சென்று யாருமில்லாத பகுதியில் வைத்து தாக்கியதாக கூறியுள்ளார்.

ட்விட்டர் பதிலடி: "போலீஸ் சோதனை கவலை தருகிறது, கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து"
ட்விட்டரை எச்சரித்த இந்திய அரசு: "எங்கள் சட்டத்துக்கு கட்டுப்படுங்கள்"
இந்த சம்பவம் தொடர்பாக பர்வேஷ் குஜ்ஜர், கல்லு குஜ்ஜர், ஆடில் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் மேல்விசாரணையில் இது முன்பே அறிமுகமானவர்களுக்கு இடையில் நடந்த உள்விவகாரம் என்றும் அது மிகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்களுடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கரு கலைய அந்த முதியவர் கொடுத்த பொருளே காரணம் என்றும் அவர் மீதே ஒரு புகார் உள்ளது என்றும் காவல்துறையினர் கூறியிருந்தனர்.

இந்த விளக்கத்துக்கு பிறகும், முதியவர் தாக்கப்பட்டது தொடர்பான காணொளி மற்றும் இடுகைகளை லோனி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்தே அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

காவல்துறை விளக்கம்
முன்னதாக, காவல்துறை அளித்த விளக்கத்தில், "சமூகத்தில் உயர் பொறுப்பிலும் செல்வாக்கில் உள்ளவர்களும் தங்களுடைய உரிமைகளுக்கு உட்பட்டு உண்மையான தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் இதில் கடமை உள்ளது. இந்த வழக்கில், வகுப்புவாதத்தை தூண்டும் வகையிலான சரிபார்க்கப்படாத தகவல்களை அவர்கள் இடுகைகளில் பகிர்ந்துள்ளனர்.," என்று கூறப்பட்டுள்ளது.

அந்த இடுகைகள், சமூகத்தில் அமைதியை குலைக்கும் நோக்குடன் பகிரப்பட்டுள்ளன. அவை பதற்றத்தை மட்டுமின்றி உத்தர பிரதேசத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் மத்தியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன என்று காவல்துறை விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக லோனி பகுதி காவல் நிலைய அதிகாரியிடம் பேசியபோது, "அந்த முதியவரிடம் ஜெய் ஸ்ரீராம் என கூறுமாறு யாரும் நிர்பந்திக்கவில்லை. இந்த வழக்கில் மேலும் சில முஸ்லிம் நபர்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது," என்று கூறினார்.

சரிபார்க்கப்படாத தகவல்களை ட்விட்டர் நிறுவனம் தனது தளத்தில் இருந்து நீக்காமல் அலட்சியமாக இருந்ததால் அதன் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரி அகிலேஷ் குமார் மிஸ்ரா பிபிசியிடம் பேசுகையில், "சர்ச்சை காணொளியை பகிர்ந்தது குறித்து வருகிறோம். வைரலான காணொளியை ஜோடித்து வெளியிட்டது யாராக இருந்தாலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வோம்," என்று கூறினார்.

மத்திய அரசின் புதிய ஐடி விதிகள்
இந்திய அரசு சமீபத்தில்தான் டிஜிட்டல் ஊடக ஒழுங்குமுறை விதிகளை அறிமுகப்படுத்தியது. அதன்படி சமூக ஊடகங்களிலும் ஆன்லைனிலும் பதிவாகும் சரிபார்க்கப்படாத தகவல்களை சரிபார்ப்பது, ஒழுங்குபடுத்துவது அல்லது நீக்குவது சம்பந்தப்பட்ட பொறுப்பு அந்தந்த தளங்களையே சாரும் என்று அரசு கூறியிருந்தது. இந்த விதிகளுக்கு உடன்படுவதில் சில கருத்து வேறுபாடுகள் இருப்பதால் அது தொடர்பாக நீதிமன்றத்தின் தலையீட்டை ட்விட்டர் நிறுவனம், வாட்ஸ்அப் உள்ளிட்டவை நாடியுள்ளன.

இந்த நிலையில், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் அமலுக்கு வந்த பிறகு ட்விட்டர் மீது இந்தியாவிலேயே பதிவாகும் முதல் வழக்காக இது கருதப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளரிடம் கேட்டதற்கு, "எங்களுடைய கவனத்துக்கு இந்த புகார் வரவில்லை. குற்றவியல் விவகாரத்தில் நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை," என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் சட்டபூர்வ அந்தஸ்தை இழந்து விட்டதாக தகவல் வெளியானது. இருப்பினும், இந்த தகவலை மத்திய அரசு உறுதிப்படுத்தாத நிலையில், ட்விட்டர் நிறுவன செயல்பாடுகளை விமர்சித்து இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமது ட்விட்டர் பக்கத்திலேயே கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனம் இந்தியாவில் சட்டபூர்வ அந்தஸ்தை இழந்து விட்டதாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த தகவலை மத்திய அரசு உறுதிப்படுத்தாத நிலையில், ட்விட்டர் நிறுவன செயல்பாடுகளை விமர்சித்து இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தமது ட்விட்டர் பக்கத்திலேயே கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

சமூக ஊடகமான ட்விட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பாதுகாப்பு உள்ளது. ஊடக செய்திகளின்படி அந்த சட்டபூர்வ பாதுகாப்பு அந்தஸ்தின் தரம் குறைக்கப்பட்டால், ட்விட்டர் நிறுவனத்தை குற்றவியல் விவகாரங்களில் பொறுப்புடைமையாக்க முடியும்.

இந்த நிலையில், ரவிசங்கர் பிரசாத் முன்வைத்துள்ள விமர்சனத்தில், "மே 26ஆம் தேதி இந்திய அரசு அறிமுகப்படுத்திய இடைக்கால வழிகாட்டுதல்களுக்கு உடன்பட ட்விட்டர் நிறுவனத்துக்கு அரசு வாய்ப்பு கொடுத்தது. ஆனால், அவற்றை அந்த நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை," என்று கூறியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்துக்கு சட்ட பாதுகாப்பு உள்ளதா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. எனினும், அரசின் வழிகாட்டுதல்களுக்கு ட்விட்டர் நிறுவனம் உடன்படவில்லை என்பதே எளிய உண்மை என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பேச்சு சுதந்திரத்தின் கொடியை ஏந்தும் பாதுகாவலராக தன்னை காட்டிக் கொள்ளும் ட்விட்டர், இடைக்கால வழிகாட்டுதல்கள் என வரும்போது வேண்டுமென்றே அதை மீறும் வகையில் செயல்படுகிறது என்றும் ரவிசங்கர் பிரசாத் குறிப்பிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் நடந்த சம்பவம், போலிச் செய்திகளுக்கு எதிரான நடவடிக்கையில் ட்விட்டரின் தன்னிச்சையான போக்கை வெளிப்படுத்தும் உதாரணம் என்றும், தமது உண்மை சரிபார்ப்பு நடைமுறை மீது அதீதமான நிலையை ட்விட்டர் கொண்டுள்ளது.

ஆனால், உத்தர பிரதேச விவகாரம் போன்ற பல வழக்குகளில் இது எடுபடாது. தவறான தகவலை எதிர்கொள்வதில் ட்விட்டரின் நிலைப்பாடு தோல்வியடைந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது என்று ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

ட்விட்டர் விளக்கம் என்ன?

இந்த விவகாரத்தில் ட்விட்டரின் நிலைப்பாடு தொடர்பாக அதன் செய்தித் தொடர்பாளரிடம் பிபிசி பேசியது. அதற்கு பதிலளித்துள்ள அவர், "ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுடைய நடவடிக்கையை இந்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத்துறையிடம் தெரிவித்து வருகிறோம். இடைக்காலமாக ஒரு விதிகள் அமலாக்க தலைமை அதிகாரியை நியமித்துள்ளோம். அதன் விவரம் விரைவில் அமைச்சகத்திடம் தெரிவிக்கப்படும். புதிய வழிகாட்டுதல்களுக்கு உடன்பட ஒவ்வொரு முயற்சியையும் தொடருவோம்," என்று கூறியுள்ளார்.

ரவிசங்கர் பிரசாத்தின் சமீபத்திய ட்வீட்டுகள் அல்லது முதல் தகவல் அறிக்கை தொடர்பாக கேட்டதற்கு, அவை தொடர்பாக தெரிவிக்க தங்களிடம் எந்த கருத்தும் இல்லை என்று ட்விட்டர் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.