கல்வித் துறை பதிவுகளுக்கு லைக், ஷேர் வாங்கித்தர வற்புறுத்தப்படும் பஞ்சாப் ஆசிரியர்கள்...

20 June 2021

பஞ்சாப் கல்வித் துறைக்கும் அதன் ஆசிரியர்களுக்கும் இடையில் ஒரு மோதல் போக்கு நடைபெற்று வருகிறது.


சமூக வலைதளங்களில். தங்கள் பதிவுகளுக்கு ஆசிரியர்கள் லைக் போட்டு, அதிக லைக்குகள் வாங்க உதவ வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் வலியுறுத்த, ஆசிரியர்களுக்கு இது பிடிக்கவில்லை. இதனால், அவர்களின் பதிவுகளுக்கு ஆசிரியர்கள் டிஸ்லைக் செய்கின்றனர்.

இந்திய அரசின் 2019-20ம் ஆண்டுக்கான கல்வித்துறைக்கான செயல்திறன் தர அட்டவணையில் சில நாள்களுக்கு முன்பு முதலிடம் பிடித்தது பஞ்சாப். இது தொடர்பான கொண்டாட்டம் கல்வித்துறையின் யூ ட்யூப் சேனலில் பகிரப்பட்டது. அப்போது ஆசிரியர்களோடு பேசியது நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோ 4,500 லைக்குகளையும், 12,000 டிஸ்லைக்குகளையும் பெற்றது.

அட்டவணையில் முதலிடம் பிடித்தது குறித்து பஞ்சாப் கல்வித்துறை அமைச்சர் இந்தெர் சிங்க்லா ஜுன் 12 ஆம் தேதி அன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசியபோது, அந்த காணொளி 7,600 லைக்குகளையும், 9,200 டிஸ்லைக்குகளையும் பெற்றது.

பஞ்சாப் கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பக்கம் மற்றும் அது தொடர்பான பக்கங்களில் இடும் பதிவுகளை லைக், ஷேர் மற்றும் கமெண்ட் செய்யும்படி தாங்கள் வற்புறுத்தப்படுவதாக பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

மேலும் ஓர் ஆசிரியர் ஒரு பதிவிற்கு, தங்கள் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து, அதிகப்படியான லைக்குகள், ஷேர்கள் மற்றும் கமெண்டுகளை பெற வைக்க வேண்டும் என "இலக்கு" வைக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் ஆசிரியர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் கூகுள் படிவம் (Google form) ஒன்றை காட்டுகின்றனர். அதில் இந்த வாரம் பள்ளி ஃபேஸ்புக் கணக்கில் இடப்பட்ட பதிவுகள், இந்த வாரம் பதிவு செய்யப்பட்ட லைக்குகள், கமெண்டுகளின் எண்ணிக்கை, யார் யாரிடம் எல்லாம், அதாவது எத்தனை பேரிடம் பேஸ்புக் பதிவு பகிரப்பட்டுள்ளது போன்ற கேள்விகள் அதில் இடம்பெற்றிருக்கின்றன.

எஸ்பிஎஸ் நகரில், கல்வித்துறை இட்ட பதிவுகளுக்கு குறைந்தது 10 லைக்குகள், 10 கமெண்டுகள் மற்றும் 10 ஷேர்கள் பெறப்பட்டிருக்க வேண்டும் என்று இலக்கு வைக்கப்பட்டு, அதை செய்ததை நிரூபிக்க ஸ்க்ரீன்ஷாட் கேட்கப்படுவதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

இது தவிர தினமும் எத்தனை லைக்குகள், கமெண்டுகள், ஷேர்கள் செய்யப்பட்டிருக்கிறது என்ற கணக்கும் எடுக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

ஐடி விதிகள்: ட்விட்டருக்கு எதிர்வினையாற்றிய ரவிசங்கர் பிரசாத் - தொடரும் சர்ச்சை
இந்தியாவில் சமூக ஊடக கட்டுப்பாடுகள், எதிர்க்கும் வாட்ஸ்அப் - 10 முக்கிய தகவல்கள்
நவன்ஷரின் மாவட்ட கல்வித்துறை அதிகாரி இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்ட நகல் ஒன்று பிபிசியிடம் இருக்கிறது. அதில் கல்வித்துறையின் நடவடிக்கைகளை பரப்பும் வகையில் மாவட்டங்களுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி நடத்தப்படுகிறது.

ஜுன் 17 ஆம் தேதி இரவு 11 மணி முதல் ஜூன் 18ஆம் தேதி இரவு 11 மணிக்குள் ஒவ்வொரு ஆசிரியரும் பதிவுகளுக்கு 10 லைக்குகள், 10 ஷேர்கள் மற்றும் 10 கமெண்டுகள் பெற்றிருக்க வேண்டும். இதனை கண்காணிக்க ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது மிகவும் வருத்தம் அளிப்பதாக கூறுகிறார் பஞ்சாபின் ஜனநாயக ஆசிரியர்கள் முன்னணியின் ரக்வீர் சிங்.

"பள்ளிகளில் இருக்கும் வேலைக்கு மேல் அதிக வேலை கொடுப்பதாக ஆசிரியர்கள் மிகவும் கோபமாக இருக்கிறார்கள். அவர்கள் வைக்கும் நியாயமான கோரிக்கைகள் 5 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் முதலமைச்சர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் மற்ற மூத்த அதிகாரிகளின் ஃபேஸ்புக் பக்கங்களில் அதிக டிஸ்லைக்குகளை ஆசிரியர்கள் பதிவு செய்கின்றனர். மேலும் அவ்வப்போது வீதிகளில் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்."

மேலும் அவர் கூறுகையில், கல்வித்துறைக்கு லைக்குகளையும் ஷேர்களையும் பெறுவது ஆசிரியர்களின் வேலை கிடையாது, ஆனால், அதனை செய்யுமாறு அவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

எனினும் கல்வித்துறை செய்து வரும் சில நல்ல விஷயங்களை பரப்புவதில் எந்தத் தவறும் இல்லை என்று சில ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

தங்கள் துறையில் இருக்கும் யாரையும் இதற்காக வற்புறுத்துவதில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக பிபிசி பஞ்சாபி சேவையிடம் பேசிய மாவட்ட கல்வித்துறை அதிகாரி ஜகித் சிங், மாணவர்களிடமும், பெற்றோரிடத்திலும், மற்றவர்களிடமும் கல்வித்துறையின் நடவடிக்கைகளை கொண்டு சேர்க்க அனைத்து மாவட்ட ஆசிரியர்களும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். கடந்த 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்து, அரசாங்கம் ஸ்மார்ட் பள்ளிகளை உருவாக்கியுள்ளது. இதை பெற்றோருக்கும் மற்றவர்களுக்கு கொண்டு சேர்ப்பது மிகவும் முக்கியம். இதனால் குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் சேர்வார்கள்" என்றார்.

இதற்காக ஆசிரியர்களுக்கு இலக்கு வைக்கப்படுவது குறித்து கேட்டதற்கு, "நாங்கள் யாரையும் வற்புறுத்தவில்லை. இதை செய்யாத ஆசிரியர்களை நாங்கள் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டோம்" என்றார்.