நீதிக்கட்சியின் வரலாறு

14 June 2021

நீதிக் கட்சியின் தோற்றம் தென்னிந்திய வரலாற்றில் மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓர் இயக்கம் தேவை என்ற கோரிக்கை தமிழகத்தில் எழ, அதனை நிறைவேற்றும் வகையில் உருவானது நீதிக் கட்சி. சாதிய பாகுபாடுகளால் அமைக்கப்பட்டிருந்த சமூகத்தின் ஒரு சாராருக்கு மட்டுமே கல்வி, அரசு வேலை கிடைக்கப்ப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கவனம் எடுத்துக் கொண்ட பலரும், சமூக நீதி குறித்து சிந்திக்க தயாராக இல்லை. மாறாக தனது சமூகத்தினரின் கட்டுப்பாட்டில் அணைத்தும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வந்தனர். இந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்துப் போராடியவர்கள் வரலாற்றில் போற்றப்படவில்லை. இப்படி வரலாற்று பின்னணியைக் கொண்டதுதான் நீதிக் கட்சி.

பல பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்புகளில் பிராமணர்கள் இல்லாதவர்கள் யாரும் இல்லாததை எடுத்து சுப்பிரமணியம், புருஷோத்தம நாயுடு என்ற இரண்டு வழக்கறிஞர்களால் 1909ஆம் ஆண்டு சென்னை பிராமணரல்லாதார் சங்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் வகுப்புவாதத்தை தூண்டுவதாக பிராமணர்கள் போர்க்கொடி தூக்கினர். இதனை அடுத்து இரண்டு வருடங்களுக்குப் பிறகு கட்சி முடக்கப்பட்டது. 
1912ஆம் ஆண்டு நடேச முதலியார் வழி நடத்த சென்னை ஐக்கிய கழகம் தொடங்கப்பட்டது. இதுவே பின்னர் " திராவிட சங்கம்" என பெயர் மாறியது. 1916ஆம் ஆண்டு நடேச முதலியார், டாக்டர் டி எம் நாயர், தியாகராய செட்டியார் கூடி அவ்வபோது விவாதம் நடத்தினார்கள். பிறகு தங்களின் கொள்கைகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக பத்திரிக்கைகளை தொடங்க முன் வந்தார்கள். தொடங்கப்பட்ட பத்திரிக்கைகளில் தமிழ் பதிப்பிற்கு திராவிடம் எனவும், ஆங்கில பதிப்பு எதுக்கு ஜஸ்டிஸ் எனவும் பெயரிட்டனர். பிறகு, தென்னிந்திய நல உரிமைச் சங்கம் இணைக்கப்பட்டு, நீதிக் கட்சியாக மாறியது. 
பிராமணர்கள் அல்லாதவர்களுக்கான கொள்கை அறிக்கை பி.டி தியாகராயர் வெளியிட்டார். பிராமணர்கள் அல்லாதவர்கள் அதிக சதவீதம் இருந்தாலும் பிராமணர்களுக்கு தான் அரசு வேலைகள் கிடைப்தாகவும், பிற சலுகைகள் கிடைப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு பிராமணப் பிரிவினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். கல்வியை மூலதனமாகக் கொண்டு பிராமணர் அல்லாதவர்களை உயர்த்தி விடலாம் என்ற நோக்கம் நீதி கட்சி தலைவர்களிடம் மேலோங்கியிருந்தது. பிறகு தொடர் பரப்புரை களின் மூலம் பொதுமக்கள் நீதிக்கட்சியின் பக்கம் சாய்ந்தனர். 

1917 ல் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியாவை இந்தியர் ஆளலாம் என்ற ஒரு முடிவை ஆங்கில அரசு முன் வைத்தது. ஆங்கிலேயர்கள் ஆதரவு தெரிவித்தனர். 
1919 ல் ஜூனில், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக நீதிமன்றங்கள் ஏறி போராடிய டி.எம்.நாயர் உடல்நலக்குறைவால் லண்டனில் காலமானார். சட்டத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்களையும், பட்டவர்களையும், சட்டமன்றத்திற்கு அனுப்பும் முதல் முயற்சியில் வெற்றி கண்டது நீதி கட்சி. நீதிக்கட்சியின் தொடர் செயல்கள் பார்ப்பனர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இருப்பினும் அவர்கள் தங்களின் போராட்டங்களையும் பரப்புரைகளையும் நிறுத்திக் கொள்ளவில்லை. பிராமண ஆதரவு பத்திரிக்கைகளில் தாழ்த்தப்பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் பற்றி இழிவான கட்டுரைகள் வெளியானது.
1920 ல் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பெருவாரியான இடங்களை பெற்று வெற்றிபெற்றது. 63 இடங்களை கைப்பற்றியது. அப்போது சுப்புராய ரெட்டி தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. 
1923ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், சுயராஜ்ஜியக் கட்சி நீதிக் கட்சியை எதிர்த்து போட்டியிட்டது. மீண்டும் பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது நீதிக் கட்சி. இம்முறை பனகல் அரசர் தலைமையில் அமைச்சரவை பதவி ஏற்றது. ஆனால் நீதிக்கட்சியின் ஒற்றுமை நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. 1926 நடைபெற்ற தேர்தலில் பிளவுபட்டதால் எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியிடம் தோல்வி அடைந்தது நீதிக்கட்சி.
1930ல் நடைபெற்ற தேர்தலில், நீதி கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் அமைச்சரவை பொறுப்பேற்றது. பிறகு 1937 ஆம் ஆண்டு வரை நீதிக்கட்சியின் ஆட்சி தொடர்ந்தது. சமுகத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளைக் கலைவதையே முதற்கட்ட நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது நீதிக்கட்சி. தற்போது தமிழகத்தில் அமலில் இருக்கும் பல சட்டங்கள் நீதிக் கட்சியால் முன்னெடுத்து கொண்டுவரப்பட்டவையே. தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் எழுப்பியது நீதிக்கட்சி. 
நீதிக்கட்சியின் ஆட்சிக்கு முன்பு வரை கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட சமூக மக்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது. செயல் முறைகளை மாற்றி அனைவருக்கும் கல்வி, அனைத்து ஜாதியினரும் பள்ளிக்கூடம் சென்று பயிலலாம் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில். 
பிறகு பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்து மக்களாலும் செலுத்த முடியுமா என்று தீர்மானித்த பிறகு கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. இருப்பினும் ஆதிதிராவிடர் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு வரும் போது மற்ற சாதியினரால் இன்னல்களுக்கு ஆளாக்க படுவார்களா என்று சிந்தித்தது நீதிக்கட்சி. ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எளிதில் வந்து செல்லும் இடங்களில் பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட்டன. 
இந்தியாவில் வட மாநிலங்களில் தற்போது வரை அனைத்து சாதியினருக்கும் சமமான கல்வி என்பது இல்லை. ஆனால் 1923ஆம் ஆண்டே தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.  
1921 முதல் 1928 வரை 19,095 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதன் மூலம் நீதிக்கட்சி கல்விக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்து இருந்தது என்பது தெளிவாக தெரிகிறது. தமிழகத்தில் இன்று வரை கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித் தொகைகளை அறிமுகம் செய்தது நீதிக்கட்சி தான். 1 925 முன்புவரை சமஸ்கிருதத்தை படிக்காமல் பட்டம் பெற முடியாத நிலை இருந்தது.
ஆனால் நீதிக்கட்சியின் போராட்டங்களுக்கு பிறகு தமிழில் படித்துப் பட்டம் பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. பள்ளர், பறையர் என்று அழைக்கப்பட்டவர்கள் இனிமேல் ஆதி திராவிடர் என்றே அழைக்கப் படுவார்கள் என்று 1925ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பொதுப் பள்ளிகளில் இதற்கு முன்னர் வரை ஆதிதிராவிடர்கள் படிக்க முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. அதை உடைத்தெறிந்து அனைவரும் பள்ளிக்கூடங்களில் படிக்கலாம் என்ற நிலையை உருவாக்கியது நீதிக்கட்சி. இதனால் அந்த ஆண்டு பள்ளிகளில் ஆதிதிராவிடர்கள் பயில்வது கணிசமாக உயர்ந்தது. 
ஆதி திராவிட ஜாதியைச் சேர்ந்த பிள்ளைகளை தனியாக வகுப்பறையில் வைத்து பாடம் சொல்லித்தர வேண்டும் என்று பல்வேறு பக்கங்களில் இருந்து நீதிக் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் அதனை ஏற்காத நீதிக்கட்சி அனைவரும் ஒரே இடத்தில் தான் கல்வி பயில வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தது. தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து ஏழைப் பிள்ளைகளின் பசியை ஆற்றியது காமராசர். 

ஆனால் நீதிக்கட்சியின் ஆட்சியிலேயே இத்திட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது என்பதே உண்மை. தியாகராய செட்டியாரின் கடும் உழைப்பின் பயனாக ஆதிதிராவிடர் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் அவர்களுக்கு மதிய உணவை இலவசமாக வழங்கியது அன்றைய நீதிக்கட்சி.
ஆதிதிராவிடர்கள் பொது இடத்தில் நடமாடி தாக்கப்பட்டால் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்ற சட்டத்தை சென்னை சட்டமன்றத்தில் கொண்டு வந்தார் இரட்டைமலை சீனிவாசன்.
தற்போது பெண்களுக்கு சமூகத்தில் சம நிலை, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு, வாக்களிக்கும் உரிமை திட்டங்கள் வருவதற்கு முன்னோடியாக இருந்தவர்கள் நீதிக் கட்சிக்காரர்கள். நீதிக்கட்சியின் ஆட்சியில் தான் ஒரு பெண் சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டது முதல் முறை. அவர் தான் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. கடவுளின் பெயரால் பெண்களை அடிமையாக வைத்திருந்த தேவதாசி என்கிற கொடிய நடை முறையை ஒழித்துக் கட்டினார் முத்துலட்சுமி ரெட்டி. 1929 சட்டமாகவும் இது ஏற்றப்பட்டது. இவ்வாறு எண்ணிலடங்கா சாதனைகளை பதிமூன்று வருடங்களில் தமிழகத்தில் நிகழ்த்தியிருப்பது வியப்பே.