மதுரை மேயர் மீது பிசிஆர் வழக்கு? - அப்செட்டில் திமுக தலைமை

29 May 2022

மதுரை மாநகராட்சி சார்பில் சிறப்பு தூய்மை பணி(Mass Cleaning) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், ஒரு பகுதியை தேர்வு செய்து அந்த இடத்தில் உள்ள குப்பைகள், கழிவுகளை அகற்றி தூய்மையாக மாற்றுவதே இலக்கு என மாநகராட்சி தெரிவித்துள்ளது.




மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மே 28 சனிக்கிழமை மூன்றாவது மண்டலத்திற்கு உட்பட்ட 59-வது வார்டு ரயில்வே காலனி பகுதியில் ‘சிறப்பு தூய்மை பணி’ நடைபெற்றது. இதனை, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காரணம் மேயர் இந்திராணி ஆய்வின் போது தூய்மை பணியாளர்கள் பாதாள சாக்கடை அடைப்பை இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்தனர். அவர்களுக்கு கையுறை, முகக்கவசம், காலணி உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாததால் வெறும் கையால் இயந்திரத்தை பிடித்தவாறு சுத்தம் செய்கின்றனர்.


துப்புரவு பணியாளர்களை தூய்மை பணியாளர்கள் என்று பெயர் மாற்றம் செய்த திமுக அரசுக்கு அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காதது ஏன்? என்றும், ஒரு மேயர் முன்னிலையில் இதுபோன்ற அவலங்கள் நடந்துள்ளதை அரசு வேடிக்கை பார்ப்பதாகவும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சமூக வலைத்தளங்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.


மதுரையில் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி இரவு கழிவுநீர் கிணற்றை சுத்தம் செய்யும் பணியின் போது தூய்மை பணியாளர்கள் மூவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து கடந்த வாரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தில் விசிக கவுன்சிலர் முனியாண்டி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வண்ணம் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், இந்த வாக்குறுதியை மீறியதாக இன்றைய சம்பவம் உள்ளது.


இந்நிலையில், மேயர் இந்திராணி மீது, மதுரையை சேர்ந்த முத்துகுமார் என்ற வழக்கறிஞர், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு தபால் மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "இன்று(28.5.2022) 59-வது வார்டு ரயில்வே காலனியில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்கள், கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு மேற்கொண்டார். 
அப்போது பட்டியல் சமூகத்தை சேர்ந்த சுகாதார பணியாளர் ஒருவர் காலில் செருப்பு, கையுறை ஏதுமில்லாமல் மனித கழிவுகளுடன் சேர்ந்து வந்த கம்பியை தொட்டு வேலை செய்வதற்கு அதிகார தோரணையில் மதுரை மாநகராட்சி மேயரால் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தும் மேயர் மற்றும் அதிகாரிகளின் கண் முன்னே நடைபெற்றது. இது முற்றிலும் வன்கொடுமை செய்த குற்றத்திற்கு சமம். எனவே (பிரமலைக் கள்ளர்) என்ற சமூகத்தை சேர்ந்த மேயர் இந்திராணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.




ஏற்கனவே மாநகராட்சி கூட்டத்தில் மேயர் அறையின் முன்பு பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் திமுக தலைமை மேயர் இந்திராணி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது வன்கொடுமை புகார் வரை சென்றுள்ளது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.