இந்தி திணிப்பை எதிர்ப்போம் - கலைஞர் சிலையில் இடம்பெற்றிருக்கும் கட்டளைகள்

28 May 2022

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.


ஸ்டாலின் தெரிவித்திருந்தார். மேலும் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.


அதன்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது.


அந்த இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் கலைஞர் கருணாநிதி சிலை நிறுவப்பட்டுள்ளது.ரூ.1.7 கோடி மதிப்பில் அந்த முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டிருக்கும் இச்சிலைதான் இதுவரை நிறுவப்பட்ட கருணாநிதி சிலைகளிலேயே மிகப்பெரியதாகும்.


இந்த சூழலில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட்டது. சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்தார்.


சிலை திறப்புக்குப் பிறகு கலைவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி. கனிமொழி, எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


இந்நிலையில் கலைஞர் கருணாநிதி சிலையில் பொறிக்கப்பட்டுள்ள 5 வாசகங்கள் தற்போது பலத்த வரவேற்பு எழுந்துள்ளது. சிலையில் பொறிக்கப்பட்டுள்ள 5 வாசகங்கள் பின்வருமாறு:


* அண்ணா வழியில் அயராது உழைப்போம்


* இந்தி திணிப்பை எதிர்ப்போம்


* ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைத்தே தீருவோம்


* மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி


* வன்முறையை தவிர்த்து வறுமையை வெல்வோம்