அதிபரின் ட்வீட்டை நீக்கியதற்கு பதிலடியாக ட்விட்டருக்கு தடை விதித்துள்ளது நைஜீரியா

05 June 2021


 ஆப்ரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியா நாட்டின் அதிபராக பதவி வகிப்பவர் முகம்மது புஹாரி. கடந்த சில ஆண்டுகளாகவே நைஜீரியாவில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு உள்நாட்டுப் போர் வெடிக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது.
 
இச்சூழலில், அதிபர் முகம்மது புஹாரி தனது ட்விட்டர் பக்கத்தில் 1967-1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டு சண்டையை மேற்கொள் காட்டி பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், ''இன்று அரசுக்கெதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டு போரில் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் அழிவுகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 30 மாதங்களாக எங்களுடன் களத்தில் இருந்தவர்கள், போரை சந்தித்தவர்கள், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலேயே நடத்துவார்கள்’' என குறிப்பிட்டிருந்தார்.
 
image
அவரது கருத்து போராட்டத்தில் ஈடுபடுவர்கள் மீது தாக்குதலை நடத்த தூண்டுவது போல அமைந்துள்ளதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், இந்த பதிவு ட்விட்டரின் வழிகாட்டு விதிமுறைகளுக்‍கு எதிரானது என்ற வகையில் அதிபர் முகம்மது புஹாரியின் பதிவை ட்விட்டர் நிறுவனம் அதிரடியாக நீக்கியது.
 
இதனால் ஆத்திரமடைந்த அதிபர் முகம்மது புஹாரி, தனது ட்விட்டர் பதிவு நீக்கப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நைஜீரியாவில் ட்விட்டர் செயல்பட தடை விதித்துள்ளார். தங்கள் நாட்டில் ட்விட்டர் செயல்பட காலவரையறையற்ற தடை விதிக்கப்படுவதாக நைஜீரிய அரசு நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.