மேற்கு வங்காள தேர்தலில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் பலி

10 April 2021

மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலில் காலை 9:50 மணி நிலவரப்படி 15.85% வாக்குகளும், 11.05 மணி நிலவரப்படி 16.65% வாக்குகளும் பதிவாகி இருந்தன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.  இந்நிலையில், தொடர்ந்து மந்தகதியில் வாக்குகள் பதிவாகி வருகின்றன.

பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜி சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சூழலில், செய்தி சேகரிக்க சென்ற ஊடகக்காரர்களின் கார்கள் மீதும் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது.  அவர்களது கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.  ஊடகங்கள் மற்றும் பா.ஜ.க. வேட்பாளர் லாக்கட் சாட்டர்ஜி சென்ற கார்கள் மீது வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேற்கு வங்காளத்தின் கூச் பெஹாரில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது.  இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.  4 பேர் காயமடைந்தனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும், இந்த துப்பாக்கி சூட்டில் மத்திய படைகள் ஈடுபட்டு உள்ளன என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.  இதனால் அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது.