கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுப்பது பற்றி பிரதமர் மோடி, எடியூரப்பாவுடன் பேச்சு

12 April 2021

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசத்தொடங்கியுள்ளது. நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை கடந்து பதிவாகி வருகிறது. அதுபோல் கர்நாடகத்திலும் கடந்த மாதம் இறுதியில் இருந்து கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

 அதாவது வைரஸ் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா 2-வது அலையை எதிர்கொள்ள கர்நாடக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. இருப்பினும் வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்தபாடில்லை.

 இந்த நிலையில் பிரதமர் மோடி கடந்த 8-ந் தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, நுண்ணிய கட்டுப்பாட்டு பகுதிகளில் கவனம் செலுத்துவது, கொரோனா தடுப்பூசியை அதிகளவில் வினியோகம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

 பிரதமரின் ஆலோசனையை ஏற்று கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட 8 நகரங்களில் நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு அடுத்தடுத்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. நேற்று முன்தினம் 6,955 பேரும், நேற்று 10,250 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை கொேரானா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 225 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் கர்நாடக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவை பிரதமர் மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், கர்நாடகத்தில் கொரோனா பரவல் நிலை, பாதிப்பு எண்ணிக்கை, வைரஸ் தொற்றை எதிர்கொள்ள எடுத்த நடவடிக்கைகள், இரவு ஊரடங்கு உள்ளிட்டவை பற்றி எடியூரப்பாவிடம் கேட்டறிந்தார்.

 இதை கேட்டறிந்த பிரதமர் மோடி, கொரோனா பரவலை கட்டுப்படுத்த சில அறிவுரைகளை எடியூரப்பாவுக்கு வழங்கினார். இதுகுறித்து எடியூரப்பா தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

 பிரதமரிடம் நான் தொலைபேசியில் பேசினேன். கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், இரவு நேர ஊரடங்கு அமல் ஆகியவை குறித்து எடுத்துக் கூறினேன். மாநில அரசின் நடவடிக்கைகளை பிரதமர் பாராட்டினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணியில் நுண்ணிய கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிப்பதில் கவனம் செலுத்தும்படி பிரதமர் உத்தரவிட்டார்.

கொரோனாவுக்கு எதிராக போராட தடுப்பூசி நமக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஆயுதம். அதனால் தகுதியானவர்கள் உடனே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு விதிமுறைகனை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.