75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக சர்வதேச 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம் கண்காட்சி'

23 September 2021

கோவை 

75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டமாக சர்வதேச வர்த்தக இயக்குனரகம் (Directorate general of foreign trade) மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (Ministry of Commerce & Industry) சார்பில் 'ஏற்றுமதியாளர்கள் சங்கமம் மற்றும் கண்காட்சி' கோவையில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியினை துவக்கி வைத்தனர்.

இக்கண்காட்சியில் வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்வேறு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்திருந்தனர். அவற்றை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் மற்றும் தொழில்துறையினர் சந்திக்கும் சவால்கள் குறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் 'ஏற்றுமதியாளர் சங்கமம்' எனும் தலைப்பில் கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது.

கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்,

தொழில்துறையில் கோவை மாவட்டம் தேசிய அளவில் முக்கிய பங்காற்றி வருவதாகவும், பொறியியல் சார்ந்த நிறுவனங்கள் மட்டுமின்றி பல்வேறு உற்பத்தி நிறுவனங்கள் கோவையில் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், தென்னைநார் பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்கும் கோவை மாவட்டத்திலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.