நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை கண்டறிய அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் பலே ஐடியா! !

16 April 2021

நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை எளிதில் கண்டறிய செயற்கைக் கோள் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து ஒப்பிட்டுப் பார்க்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாவட்டத்தில் 112 கோடி ரூபாய் செலவில் பெரும்பள்ள ஓடையின் இரு புறமும் சுவர் எழுப்ப தடை கோரி, பெரும்பள்ள ஓடை பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி  மற்றும் செந்தில்குமார்  ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை எளிதில் கண்டறிய ஒவ்வொரு பஞ்சாயத்து மற்றும் வட்டங்களில் உள்ள அனைத்து நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய உத்தரவிட்டது.

மேலும்,  பதிவிறக்கம் செய்யப்பட்ட நீர்நிலைகளின் செயற்கைக்கோள் புகைப்படங்களை வருவாய்த்துறை நில ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் நடைமுறையை ஜூன் இறுதிக்குள் முடிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.