மீன்பிடித் தடைக்காலம் இன்று தொடக்கம்: ராமநாதபுரம் மாவட்ட துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தம்

16 April 2021

மீன்பிடித் தடைக்காலம் இன்று தொடக்கம்: ராமநாதபுரம் மாவட்ட துறைமுகங்களில் விசைப்படகுகள் நிறுத்தம்

 மீன் பிடி தடைக்காலம் தொடங்கியதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் விசைப்படகுகள் புதன்கிழமை முதல் நிறுத்தி வைக்கப்பட்டன.

தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன்களின் இனப் பெருக்க காலமாக கருதப்படும் ஏப். 15 ஆம் தேதி முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை உள்ள 61 நாள்களுக்கு விசைப்படகுகளில் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்ல அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடை வியாழக்கிழமை அதிகாலை முதல் அமலுக்கு வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி, சோழியகுடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புதன்கிழமை அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டன. இத்தடை காலத்தின் போது படகுகள் மற்றும் வலைகளை சீரமைப்பதுடன் வா்ணம் பூசும் பணியிலும் மீனவா்கள் ஈடுபடுவா்கள். கடந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக அதிக நாள்கள் மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. இந்நிலையில், மீண்டும் தடைக் காலம் 61 நாள்கள் அமலுக்கு வந்துள்ளது. தற்போது கரோனா தொற்று அதிகரித்துள்ளதாலும், தங்களுக்கு மாற்றுத் தொழில் தெரியாததாலும் தடைக் காலத்தை 61 நாள்களில் இருந்து 45 நாள்களாக குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்