சமூக வலைதள கட்டுப்பாடுகளும் கருத்துச் சுதந்திரமும்..

26 June 2021

இந்தியாவில் சமூக ஊடகங்களையும் இணையத்தில் உள்ள தகவல்களையும் நெறிப்படுத்துவதற்காக புதிய வழிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது உலகம் முழுவதிலும் பரவிவரும் ஒரு போக்கின் அங்கமாகவே இருக்கிறது.


மே 26ல் நடைமுறைக்கு வந்த தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 (டிஜிட்டல் ஊடகங்களுக்கான நடத்தை விதிகளும் இடைக்கால வழிமுறைகளும்), பயனர்களின் தனியுரிமையில் குறுக்கிடுபவையாக இருக்கின்றன. மேலும், ட்விட்டர் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களின் பணியாளர்களுக்கு எதிராகக் குற்றவியல் வழக்குகள் பதியப்படுவதற்கான அபாயத்தையும் இவை அதிகரிக்கின்றன.

ஒரு நகரத்திலோ மாநிலத்திலோ வன்முறை வெடிக்கும்போதோ அல்லது பிற சூழ்நிலைகளின் காரணமாகவோ, நினைத்தபோதெல்லாம் அழுத்தம் கொடுத்து இணைய சேவை துண்டிக்கப்படுவதுபோலவே நாளை தங்களையும் நிர்வாகங்கள் நடத்துமோ என்று சமூக ஊடக நிறுவனங்கள் அச்சத்தில் இருக்கின்றன.

இந்தியாவில் இப்போது அமலுக்கு வந்திருக்கும் புதிய விதிமுறைகளைப் போன்ற சட்டங்கள், பாகிஸ்தானிலும் வியட்நாமிலும் ஏற்கனவே நடைமுறையில் இருக்கின்றன. பிரேசில், துருக்கி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இந்த விதிமுறைகளும் சட்டங்களும் உருவாக்கப்படும் கட்டத்திலோ நடைமுறைக் கட்டத்திலோ இருக்கின்றன.

புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சமூக ஊடக நிறுவனங்கள் ஒரு முதன்மை உடன்பாட்டு அதிகாரியை நியமிக்க வேண்டும். அவர் இந்தியாவில் வசிக்கும் இந்தியராக இருப்பது அவசியம். இந்திய சட்டங்களையும் விதிமுறைகளையும் நிறுவனங்கள் கடைபிடிக்கின்றனவா என்பதற்கு அவர் பொறுப்பேற்பார்.


இந்தியாவில் இயங்கும் இணையம் மற்றும் சமூக மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளரன குர்ஷாபாத் க்ரோவர் பேசும்போது, " உடன்பாட்டு அதிகாரிகளை நியமிக்கவேண்டும் என்று சமூக ஊடக நிறுவனங்களை நிர்ப்பந்திப்பது உலகமெங்கும் பரவிவரும் ஒரு போக்கு. துருக்கி, பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இந்த விதி உண்டு. ஆனால், சட்ட விதிமுறை பெரிதும் மதிக்கப்படும் நாடுகளில், குற்றம் சாட்டப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அரிதானவை" என்கிறார்.

மற்றொரு புறம், இணைய சுதந்திரத்தைக் குறைத்து மதிப்பிடும் நாடுகளில் இதுபோன்ற சட்டங்கள் வரும்போது, அவை சமூக ஊடக நிறுவனங்களின் ஊழியர்களை அச்சுறுத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஆபத்தும் உண்டு என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இணையம் சார்ந்த கருத்துரிமைக்குக் குரல் கொடுத்துவரும் க்ளோபல் நெட்வொர்க் இனிஷியேட்டிவின் திட்ட இயக்குநரான ஜேசன் பில்லிமியர், "இதுபோன்ற சட்டங்கள் பணயக்கைதிகளைப் பிடிக்கும் திட்டங்களைப் போல செயல்படும். அரசு உத்தரவுகளைப் பின்பற்றாவிட்டால் சமூக ஊடக நிறுவனங்கள் சிறை செல்ல நேரிடும்" என்கிறார்.

ஜனநாயக நாடுகளில் சமூக ஊடகங்கள் சார்ந்த சட்டங்கள் எப்படிப்பட்டவையாக இருக்கின்றன?
சமீபகாலம் வரை, பல மேலைநாடுகளில் இயங்கிவந்த சமூக ஊடக நிறுவனங்கள் தங்களைத் தாங்களே நெறிப்படுத்திக்கொண்டன. ஆனால் அரசியல் தலைவர்களும் அமைப்புகளும் அவை அளவுக்கு மீறி ஆதிக்கம் செலுத்துகின்றன என்றும், அந்த அதிகாரத்தைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றும் புகார் தெரிவித்தனர்.


டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறைகளை உருவாக்கும் ஐக்யூப்ஸ் வொயரின் நிறுவனரானச ஹீல் சோப்ரா, "உலகின் பல ஜனநாயக நாடுகளில் இதுபோன்ற பிரச்னைகள் வந்திருகின்றன. பல வழக்குகளில் அவை சில முக்கிய விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளன. சென்ற வருடம் டிசம்பர் மாதத்தில், சட்டவிரோதமான தகவல்கள் பரவுவதைத் தடுக்காவிட்டால் 10% வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஃபேஸ்புக் , ட்விட்டர், டிக்டாக் நிறுவனங்களுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்தது" என்கிறார்.

துருக்கி

சமூக ஊடக நிறுவனங்கள் அந்தந்த நாடுகளில் அலுவலகங்களை உருவாக்கவேண்டும் என்றும், குறிப்பிட்ட பதிவுகளை நீக்குவதற்கான கோரிக்கைகளுக்கு 48 மணிநேரத்துக்குள் அவை பதிலளிக்கவேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கும் ஒரு சட்டத்தை சென்ற வருடம் துருக்கி நிறைவேற்றியது.

ட்விட்டர் நிறுவனத்தின்மீது அபராதம் விதிக்கப்பட்டது, உள்ளூர் விளம்பர வருவாய் குறைக்கப்பட்டது, பிறகு ட்விட்டர் தற்காலிகமாக தடை செய்யப்பட்டது. இவை எல்லாம் நடந்த பிறகு ட்விட்டரின் அலுவலகம் ஒன்று அங்கே தொடங்கப்பட்டது.

"ஒரு நாடு இதுபோன்ற சட்டம் ஒன்றை இயற்றிவிட்டால் மற்ற நாடுகள் அதைப் பார்த்துத் தாங்களும் அப்படிப்பட்ட ஒரு சட்டத்தைக் கொண்டு வருகின்றன. இது கவலைக்குரியது" என்கிறார்கள் வல்லுநர்கள். 2017ல் ஜெர்மனி கொண்டு வந்த சட்டத்தைப் பார்த்து துருக்கி தன் சட்டத்தை இயற்றியிருக்கிறது.

ஜெர்மனி/ஐரோப்பிய யூனியன்

ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனி மிக முக்கியமான நாடாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய யூனியனின் சட்டங்கள் தவிர, ஜெர்மனியிலிருந்தும் சமூக ஊடகங்களை நெறிப்படுத்தும் ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளது. நெட்வொர்க் அமலாக்க சட்டம் (NetzDG) ஒன்றை 2017ல் ஜெர்மனி நடைமுறைப்படுத்தியது.

இரண்டு மில்லியனுக்கு மேற்பட்ட ஜெர்மானிய பயனர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், 24 மணிநேரத்துக்குள் சட்டவிரோதமான பதிவுகளை ஆராய்ந்து நீக்கவேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது. தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட சமூக ஊடக நிறுவனங்களுக்கு 50 மில்லியன் யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கான டிஜிட்டல் சேவைகள் சட்டம் ஒன்றையும் ஐரோப்பிய ஆணையம் தயாரித்துவருகிறது. சமூக வலைத்தளங்களின் பயனர்கள் பதிவிடும் விஷயங்களின்மீது நிறுவனங்களுக்கு இருக்கும் பொறுப்பு, இணையத்தில் பயனர்களைப் பாதுகாப்பது, மக்கள் வாழ்வில் பெரும்பான்மையாக ஆதிக்கம் செலுத்தும் பெரிய சமூக வலைத்தளங்களுக்கான சிறப்பு விதிமுறைகள் ஆகியவை பற்றிய அறிக்கைகளுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

டிஜிட்டல் சேவைகள் என்று சொன்னால், அதில் சமூக ஊடகம் உட்பட பல்வேறு இணைய சேவைகள் அடங்கும். இந்த சட்டவரைவில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகள் எல்லாமே, சமூக ஊடகங்கள், பயனர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிரும் தளங்கள், செயலிகளைத் தரவிறக்கம் செய்யும் இணைய ஸ்டோர்கள், பயணம் மற்றும் தங்குமிடங்களை முன்பதிவு செய்வதற்கான இணையதளங்கள் போற இணைய இடைத்தரகு நிறுவனங்களுக்குப் பொருந்தும்.

அமெரிக்கா

ட்விட்டர் போன்ற வலைத்தளங்களில், பயனர்கள் சொந்தமாகப் பதிவிடும் தகவல்களுக்கு நிறுவனங்கள் பொறுப்பல்ல என்பதுபோன்ற சட்டம் ஒன்று இருந்தது. தகவல் தொடர்பு கண்ணிய சட்டத்தின் 230வது பிரிவு இந்தப் பாதுகாப்பை அளிக்கிறது. 2020ம் ஆண்டில், மே 28ம் தேதி, இந்த சட்டத்தைக் தகர்க்கும் உத்தரவு ஒன்றில் அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். பழமைவாதிகளின் குரலை ட்விட்டர், முகநூல் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து நசுக்குகின்றன என்று அவர் முன்பிருந்தே ஆதாரமின்றி குற்றம் சாட்டி வருகிறார்.

இந்த உத்தரவு அமலுக்கு வந்த பிறகு "சமூக ஊடகங்களுக்கும் நியாயத்துக்கும் வெற்றி கிடைத்த நாள்" என்ற ரீதியில் அவர் ட்விட்டரில் பதிவிட்டார். உத்தரவில் கையெழுத்திடும்போது, "பதிவுகளைத் திருத்துதல், மறைமுகமாக ஒருவரைத் தடைசெய்தல், அவர் கணக்கைக் கறுப்புப் பட்டியலில் வைத்துக் கண்காணித்தல் ஆகிய வேலைகளை ட்விட்டர் செய்கிறது.

இவை எல்லாம் ஒரு பதிப்பாசிரியரின் வேலைகள். இப்படி செய்யும்போது, அந்தத் தளம் நியாயத்துக்கு உட்பட்ட ஒரு பொதுத்தளமாக இல்லாமல், ஒரு குறிப்பிட்ட கருத்தை மட்டும் ஆதரிக்கிற பதிப்பாசிரியர்களால் நிர்வகிக்கப்படுகிற தளமாக மாறிவிடுகிறது. கூகுள், ஃபேஸ்புக் என எந்த சமூக வலைத்தளத்தை எடுத்துக்கொண்டாலும் இந்தப் போக்கை கவனிக்க முடியும்" என்றார்.

பிரிவு 230ன் அடிப்படை அறத்தையே இந்த உத்தரவு தகர்த்துவிட்டது என்று தொழில்நுட்ப நிறுவனங்களும் இணைய உரிமை வல்லுநர்களும் தெரிவித்தனர். "பிரிவு 230, வலைத்தளங்களில் பயனர்கள் பதிவிடும் கருத்துகளுக்கு நிறுவனங்கள் பொறுப்பில்லை என்ற பாதுகாப்பை வழங்கியது. அதே சமயம், பொறுப்பு ஏற்காமல் சுதந்திரமாக முடிவெடுத்துக் கருத்துக்களை நெறிப்படுத்தும் அதிகாரத்தையும் நிறுவனங்களுக்கு வழங்கியது" என்கிறார்கள்.


ட்விட்டரின் பொது திட்ட வரைவு பற்றிய கணக்கில் இருந்து இப்படி ஒரு பதிவு எதிர்வினையாக வந்தது: "இந்த உத்தரவு பிற்போக்குத் தனமானது, எங்களுக்கு எதிரானது. ஒரு முக்கியமான சட்டத்துக்கு எதிரான அரசியல் இது. #பிரிவு230 என்பது அமெரிக்கர்களின் கருத்து சுதந்திரம், புதுமையான எண்ணங்கள் ஆகியவற்றைப் பாதுகாக்கிறது. அது ஜனநாயக அறத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரேயடியாக அதை நீக்குவது என்பது இணையவழி பேச்சு சுதந்திரத்துக்கே அச்சுறுத்தலாக அமையும்".

அமெரிக்காவின் பல தொழில்நுட்ப இதழ்களுக்குப் பதிப்பாசிரியராக இருந்த டெய்லர் ஹாட்மேக்கர், "பிரிவு 230 இல்லாவிட்டால், அமெரிக்காவிலும் உலகின் வேறு நாடுகளிலும் உள்ள சமூக வலைத்தளங்கள் இந்த அளவுக்கு நாகரிகமானவையாக மாறியிருக்க முடியாது. அதிபரின் இந்த உத்தரவு பிரிவு 230ஐ நேரடியாக எதிர்க்கிறது, சமூக ஊடகங்களைக் கட்டுப்படுத்த நினைக்கிறது. பிரிவு 230 தரும் பாதுகாப்பு இல்லாவிட்டால், பயனர்களின் பதிவுகளுக்காக சமூக வலைத்தளங்கள் வழக்குகளை சந்திக்க நேரிடும்" என்று ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

ட்விட்டருக்கும் டிரம்புக்குமான போரில் ட்விட்டரே வென்றது. அதிபர் டிரம்பின் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது. ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் அவரது கணக்கை முடக்கியுள்ளன.

பிரிட்டன்

சென்ற ஆண்டு டிசம்பர் மாதத்தில், பிரிட்டிஷ் ஊடங்கங்களை நெறிப்படுத்தும் ஆஃப்காம் நிறுவனத்தை, சமூக ஊடங்கங்களுக்கான ஒழுங்குமுறை நிறுவனமாக ப்ரிட்டன் அரசாங்கம் அறிவித்தது. அப்பாவி பொதுமக்களையும் பெண்களையும் குழந்தைகளையும் இணைய சீண்டல்களிலிருந்து காப்பதற்காக இந்த முடிவு என்று அறிவிக்கப்பட்டது.

பிபிசி உள்ளிட்ட பல ஊடகங்களைக் கண்காணித்துவரும் ஆஃப்காம், "எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களும் குழந்தைகளும் இணையத்தைப் பயன்படுத்தும்போது அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று நாங்கள் உறுதி செய்வோம். பாதுகாப்பாக இணையத்தைப் பயன்படுத்தலாம் என்ற நம்பிக்கையைப் பலருக்குத் தருவோம்" என்று தெரிவித்தது.

கருத்து சுதந்திரத்தைக் காப்பது, ஆபத்தான பதிவுகளை சமாளிப்பது போன்ற விஷயங்களில் ஆஃப்காமுக்குப் பரந்துபட்ட அனுபவம் உண்டு. பல ஆண்டுகளாக வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நாங்கள் நெறிப்படுத்துகிறோம். பிரிட்டனை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காணொளி பகிர்வு தளங்களையும் நெறிப்படுத்துகிறோம். இணைய சீண்டல்களை இப்போது கையில் எடுத்திருக்கிறோம். நாடாளுமன்றமும் அரசாங்கமும் சட்டங்களை உருவாக்கும்போது அவர்களுடன் இணைந்து செயல்படுவோம். புதிய தொழில்நுட்பத்தையும் திறனுள்ள நிபுணர்களையும் கொண்டு வருவோம்" என்றும் ஆஃப்காம் தெரிவித்தது.

இணைய சீண்டல்களைக் கட்டுப்படுத்தி எதிர்கொள்வதற்கான சரியான வழிமுறைகளைக் கொண்ட "இணைய பாதுகாப்பு சட்ட வரைவு" ஒன்றை பிரிட்டன் அரசாங்கம் இந்த வருடம் வெளியிடும். அது நாடாளுமன்றத்தின்மூலம் சட்டமாக அமல்படுத்தப்படும்.

"இப்போதே சமூக ஊடங்களைத் தணிக்கை செய்வீர்களா" என்று கேட்டதற்கு, "இல்லை, நாங்கள் சமூக ஊடங்களைத் தணிக்கை செய்ய மாட்டோம். இணையமானாலும் நம் ஜனநாயகமானாலும் கருத்து சுதந்திரம் என்பது ஆணிவேராக இருக்கிறது. நம் நாகரீக சமூகத்தின் அறங்கள் அதன் அடிப்படையில்தான் இருக்கின்றன" என்று ஆஃப்காம் பதிலளித்திருக்கிறது.

ட்விட்டர்,முகநூல், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆஃப்காமை முழுவதுமாக ஆதரிப்பதாகக் கூறியிருக்கின்றன.

ஆஸ்திரேலியா

ஏப்ரல் 2019ல் ஆஸ்திரேலிய அரசாங்கம் "வன்முறை மற்றும் வெறுப்புசார் பதிவுகளைப் பகிர்வது தொடர்பான சட்டம்" ஒன்றை உருவாக்கியது. சமூக வலைத்தளங்கள் இந்த சட்டத்தை மீறும்பட்சத்தில் சமூக ஊடக அதிகாரிகளுக்கு மூன்றாண்டு கடுங்காவலும் உலகளாவிய நிகர லாபத்தில் 10% வரை அபராதமும் விதிக்கப்படும்.

ட்விட்டர், கூகுள், ஃபேஸ்புக் போன்ற மேலைநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்களை சீனா தொடர்ந்து முடக்கிவருகிறது. சீனாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைத்தளங்களையும் அரசு தொடர்ந்து கண்காணிக்கிறது. சீனாவில் ட்விட்டர் தடை செய்யப்பட்டிருக்கிறது என்றாலும், சீன அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விபிஎன் மூலமாக சீனர்கள் ட்வீட் செய்கிறார்கள். சீன வெளியுறவுத்துறையும் இந்த முறையிலேயே ட்விட்டரைப் பயன்படுத்துகிறது.

சமீபத்தில் நைஜீரிய அதிபரின் ஒரு பதிவுக்குப் பின்னால் எழுந்த சர்ச்சைக்காக நைஜீரியா ட்விட்டரைத் தடை செய்திருக்கிறது.

இந்தியாவின் புதிய விதிமுறைகள், சமூக ஊடகங்கள், ஓடிடி தளங்கள் உள்ளிட்டவற்றின் பயனர்களுடைய குறைகளைப் போக்கவும் புகார்களின்மீது நடவடிக்கை எடுக்கவும் பயன்படும் என்று இந்திய அரசு தெரிவிக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஒருவரைக் குறைதீர்க்கும் அதிகாரியாக நிர்ணயித்து, அவர்மூலமாக இது நிறைவேற்றப்படும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பது, போலிச் செய்திகளைத் தடுப்பது, சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுவதிலிருந்து காப்பது ஆகியவை இந்த விதிமுறைகளின் நோக்கங்களாகும்.

ஆனால் பலரும் இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்கின்றனர்.

இணையம் மற்றும் சமூகத்திற்கான மையத்தைச் சேர்ந்த குர்ஷாபாத் க்ரோவர் பேசும்போது, "இந்த விதிமுறையால், ஒரு குறிப்பிட்ட பதிவை எந்த காரணங்களுக்காக சமூக ஊடகங்கள் நீக்குகின்றன என்பதில் ஒரு வெளிப்படைத்தன்மை வரும்.

ஆனால் அரசின் நோக்கம் அது மட்டுமல்ல, சில விதிமுறைகள் பயனர்களின் தனியுரிமையை பாதிக்கின்றன. ஒரு குறிப்பிட்ட தகவல்/செய்தி யாரிடமிருந்து வந்தது என்பதைத் தெரிவிக்குமாறு சமூக ஊடகங்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றன. அது தகவல் பரிமாற்றத்தின் தனியுரிமையை நிச்சயம் பாதிக்கும்" என்கிறார்.

பிரச்னை இரு பக்கமும் இருக்கிறது என்கிறார் சாஹில் சோப்ரா "இங்கு உள்ள சட்டங்களைப் பின்பற்றுமாறு அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களிடம் வலியுறுத்துவது நியாயம்தான் என்று நினைக்கிறேன். இப்போது எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சமூக ஊடகங்கள் இயங்குகின்றன.

பின்னணியைச் சேர்ந்த ஒருவராக இருந்தாலும் அவரால் ஒரு கருத்து சொல்ல முடிகிறது. அதற்குப் பணம் கொடுத்து யாராவது ஒருவர் பின்னால் இருந்துஇயக