கனடாவை பொசுக்கும் அதீத வெப்பம்!

01 July 2021

கனடா நாட்டில் வரலாறு காணாத வகையில் பதிவாகியுள்ள வெப்பத்துக்கு டஜன் கணக்கானோர் பலியாகியுள்ளதாக தெரிய வந்துள்ளது. அங்கு அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவாகியிருக்கிறது.


பிரிட்டிஷ் கொலம்பியா  மாகாணத்தில் மட்டும் திங்கட்கிழமை பதிவான வெப்பத்தால் 70 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிகழ்வுகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் வயோதிகர்கள்.
அந்த பிராந்தியத்தில் நிலவும் அசாதாரணமான வெப்பமே நிலைமைக்கு காரணம்.

கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள லைட்டனில் அதிகபட்சமாக 49.5 டிகிரி வெப்பம் பதிவானது. அதற்கு முந்தைய வாரம்வரை அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரியை கடக்கவில்லை.

வான்கூவர் புறநகர் பகுதியில்  நண்பர்கள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக வயோதிகர்கள் இருந்தால், அவர்களின் நிலைமையை கவனியுங்கள். இந்த வெப்பநிலை நமது சமூகத்துக்கு மிக மோசமானதாக உள்ளது. அதுவும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் இது மிகப்பெரிய பிரச்னையாக மாறி வருகிறது என்கிறார்கள் மக்கள்.

காவல்துறையைப் பொருத்தவரை, வான்கூவர் புறநகர் பகுதிகளான பர்னபீ, சர்ரீ ஆகிய பகுதிகளில் மட்டும் வெப்ப தாக்கம் காரணமாக 69 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அவர்களில் பலரும் உடல் நல பிரச்னைகளை எதிர்கொண்டு வந்த வயோதிகர்கள்.

சிறிய கிராமமான லைட்டனில் வாழும் குடியிருப்புவாசி மேகன் ஃபேண்டரிச் குளோபல் அண்ட் மெயில் நாளிதழிடம் பேசும்போது, "வசிப்பிடங்களை விட்டு வெளியே செல்வதே இயலாத ஒன்றாகி விட்டது," என்று கூறினார்.

இந்த வெப்பநிலையை சகித்துக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்த மேகன், தமது மகளை பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு வெளியே உள்ள வெப்பநிலை குறைவாக பதிவாகும் இடத்துக்கு அனுப்பி விட்டதாக கூறினார்.

"இயன்றவரை நாங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கிறோம். அதிக வெப்பநிலையும் வறண்ட வானிலையும் எங்களுக்கு புதிதல்ல. ஆனால், 47 டிகிரிக்கு உள்பட்ட வெப்பநிலையில் வாழ்வதற்கும் அதற்கு மேற்பட்ட வெப்பநிலையின் தாக்கத்துக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது," என்று அவர் தெரிவித்தார்.

கனடா வானிலை துறை, பிரிட்டிஷ் கொலம்பியா, ஆல்பர்ட்டா ஆகிய மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

"உலக அளவில் மிகவும் குளுமையான மற்றும் பனி அதிகம் பொழியும் இரண்டாவது நாடு எங்களுடையது. அடிக்கடி காணப்படும் பனி மழை, பனிக்காற்று பற்றி நாம் அதிகம் பேசியிருப்போம். ஆனால், இப்படியொரு வெப்பநிலை பதிவாகும் என்பது பற்றி இதுவரை நாம் பேசியது கிடையாது. இப்போதுள்ள நிலையுடன் துபையை ஒப்பிட்டால் அங்கு இதை விட குளுமையான நிலை இருக்கும் என்பது போல உள்ளது," என்று கனடா வானிலை துறையின் மூத்த ஆய்வாளர் டேவிட் ஃபிலிப்ஸ் தெரிவித்தார்.