தமிழகத்தில் இன்று முதல் அமலுக்கு வந்தது பெண்களுக்கான மாநகரப் பேருந்துகளில் இலவச பயணம்!

08 May 2021



திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிரும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பணிபுரியும் பெண்கள், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்பட அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் நகரப் பேருந்துகளில், "மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை" என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்றது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டபின், நகரப் பேருந்துகளில் இனி கட்டணமில்லாமல் பெண்கள் பயணிக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

 இதன்படி இன்று முதல், தமிழகம் முழுவதும் உள்ள நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏழு பணிமனைகளில் இருந்து 306 வழித்தடங்களில் இயக்கப்படும் 139 நகரப் பேருந்துகளிலும் "மகளிர் பயணம் செய்ய கட்டணம் இல்லை" என்ற வாசகங்கள், ஸ்டிக்கர்களாக ஒட்டப்பட்டன. இந்தப் பணியினை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.