தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி!

23 June 2021

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றது முதலே, மாநில சுயாட்சியை உயர்த்தி பிடித்து வருகிறது. இதன் வெளிப்பாடாக ஒன்றிய அரசு, தமிழ்நாடு என்கிற வார்த்தை பயன்பாடுகள், இருதரப்பு விவாதத்துக்கும் வழிவகுத்தது. உறவுக்கு கை கொடுப்போம் , உரிமைக்கு குரல் கொடுப்போம் என டெல்லியில் அவர் எழுப்பிய குரலின் சூடு தனியும் முன்பே, தனிக்கொடி தொடர்பான கருத்துக்களும்
எழுந்து கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், தனிக்கொடி தொடர்பான விவாதமும், செயல்பாடுகளும் 50 ஆண்டுகால தொடர்புடையவை. கருணாநிதி முதல்முறை முதலமைச்சராக பொறுப்பேற்றபோதே தமிழ்நாட்டுக்கென தனிக்கொடியை வடிவமைத்து வெளியிட்டார்.

அதுவரை ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டுமே தனிக்கொடி பயன்படுத்துவதற்கான அங்கீகாரம் இருந்ததால், அப்போதே இதுதொடர்பான விவாதத்தை தொடங்கி வைத்தார் கருணாநிதி. 1970ல் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தபோது கூட, தமிழ்நாட்டின் தனிக்கொடிக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார். சொல்லப்போனால் அப்போதுதான், தனிக்கொடிக்கான மாதிரியை கருணாநிதி வெளியிட்டார்.

கொடியின் ஒரு பகுதியில் இந்திய தேசிய கொடியும், மையப் பகுதியில் தமிழர் கலாச்சாரத்தை குறிக்கும் விதமாக திருவில்லிப்புத்தூர் கோயில் கோபுரத்துடன் கூடிய தமிழ்நாடு அரசின் இலச்சினையும் இடம்பெற்றிருக்கும்…
கருணாநிதி முன்வைத்த கோரிக்கைக்கு அப்போதைய பஞ்சாப் முதலமைச்சர் குர்ணம் சிங்-கும் ஆதரவளிக்க, தற்போது தனிக்கொடியுடன் வலம் வரும் கர்நாடகாவோ, கருணாநிதியின் தனிக்கொடி முடிவுக்கு அப்போது எதிர்ப்பு தெரிவித்தது. பாஜகவின் தாய் கழகமான ஜன சங்கத்தினரும், அதன் தலைவர் வாஜ்பாயும் கூட, கருணாநிதியின் தனிக்கொடி கோரிக்கையை எதிர்த்தனர். ஏன், தமிழ்நாட்டில் இரு பிரிவுகளாக செயல்பட்ட காங்கிரஸ் கட்சிகளே கூட, அந்த கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே செய்தன. அதற்கு அவர்கள் முன்வைத்த வாதம், தனிக்கொடி நாட்டை பிளவுபடுத்தும் என்பதுதான்.

இதுதொடர்பாக, சட்டமன்றத்தில் விளக்கமளித்த முதலமைச்சர் கருணாநிதி, மாநிலத்திற்கான தனிக்கொடி என்பது, இந்தியாவின் ஒருமைப்பாடு தொடர்பாக மத்திய – மாநில அரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு உள்ளது என்பதற்கான அர்த்தமில்லை என்றும், தேசிய கொடிக்கு அவமரியாதை ஏற்படுத்தும் நோக்கம் சிறிதளவும் இல்லை என்றும் கூறினார். தனிக்கொடி மாதிரியை அனுப்பியபோதே, அதில் தேசிய
கொடியை இணைக்க வேண்டும் என, மத்திய அரசு கூறியதை நினைவு கூர்ந்த கருணாநிதி, இந்த கோரிக்கை எவ்வாறு உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

இது பிரிவினைவாதக் கோரிக்கை இல்லையென இந்திரகாந்தியே சுட்டிக்காட்டியிருப்பதாக குறிப்பிட்ட கருணாநிதி, அரசியலமைப்பு ரீதியாக மாநிலங்கள் தனிக்கொடி வைத்திருப்பதை யாரும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ஆனால், இதுதொடர்பான விவாதம் 1970ல் மாநிலங்களவையில் நடைபெற்றபோது, தனிக்கொடி குறித்த தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கை வந்து, மூன்று மாதங்கள் ஆனப் பிறகும், ஏன் பதிலளிக்க தாமதித்தீர்கள் என்ற கேள்விக்கு, மத்திய – மாநில அரசுகளின் உறவு என்பது நுட்பமானது என விவரித்தார் இந்திராகாந்தி. சொல்லப்போனால், கடைசிவரை கருணாநிதியின் தனிக்கொடி கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவேயில்லை. இதன் நீட்சியாகவே, மாநில முதலமைச்சர்களின் உரிமையை நிலைநாட்ட, மாநில முதலமைச்சர்கள் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தார் கருணாநிதி. 1974ம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியேற்றிய முதல் முதலமைச்சர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்தார்.

கருணாநிதி கோரிக்கைக்கு உயிர்கொடுப்பாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ?

நாளடைவில் தமிழ்நாட்டின் தனிக்கொடி கோரிக்கை வலுவிழந்தது. இந்த நிலையில்தான், 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இக்கோரிக்கை மீண்டும் வலுப்பெற துவங்கியுள்ளது. "மாநிலத்திற்கான தனிக்கொடி வைத்திருப்பது சட்ட ரீதியாக தவறு கிடையாது. ஒரு நல்ல கொடியை உருவாக்கி முதலமைச்சரிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பது எங்களின் ஆசை” என்று கடந்த 2019ம் ஆண்டே அப்போதைய தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியதை இங்கு குறிப்பிடலாம்.

இதன் தொடர்ச்சியாகவே, கடந்தாண்டு தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்ட நவம்பர் 1ஆம் தேதி பெரியார் உணர்வாளர்கள் கூட்டமைப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினர். இப்போதைய சூழலில் ஒன்றிய அரசு, தமிழ்நாடு என்ற வார்த்தைகளைப் போலவே, தனிக்கொடியும் முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

கருணாநிதி முதல்முறையாக பதவியேற்றபோது இருந்த அதே வேகத்தை, இப்போது தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் பார்க்க முடிகிறது. ஆனால், தனிக்கொடி தொடர்பான கோரிக்கையை அதே வேகத்துடன் தமிழ்நாடு முன்னெடுக்குமா? கருணாநிதியின் கோரிக்கைக்கு மு.க.ஸ்டாலின் உயிர்கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்