அக்னி வீரர்களுக்கு 16 பொதுத் துறை நிறுவனங்களில் 10% இடஒதுக்கீடு: அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்

19 June 2022

தேவையான தகுதிகளை பூர்த்தி செய்யும் அக்னி வீரர்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் 10 சதவீத காலிப் பணியிடங்களை ஒதுக்கீடு செய்யும் திட்டத்திற்கு, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.

இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: "அக்னி வீரர்களுக்கான இந்த 10 சதவீத இட ஒதுக்கீடு, இந்தியக் கடலோர காவல்படை, பாதுகாப்புத் துறையில் உள்ள சிவிலியன் பதவிகள் மற்றும் பாதுகாப்புத் துறை சார்ந்த 16 பொதுத் துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் (HAL), பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் (BEL), பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனம் (BEML), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL), கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இஞ்சினியர்ஸ் (GRSE), கோவா ஷிப்யார்டு நிறுவனம் (GSL), ஹிந்துஸ்தான் ஷிப்யார்டு நிறுவனம் (HSL);


மசகான் டாக் ஷிப் பில்டர்ஸ் (MDL), மிஸ்ரா தாது நிகாம் (மிதானி), ஆர்மர்டு வெஹிக்கில்ஸ் நிகாம் (AVNL), அட்வான்ஸ்டு வெப்பன்ஸ் & எக்யுப்மெண்ட் இந்தியா நிறுவனம் (AW&EIL), முனிஸன்ஸ் இந்தியா நிறுவனம் (MIL ), யந்த்ரா இந்தியா நிறுவனம் (YIL), கிளைடர்ஸ் இந்தியா நிறுவனம் , இந்தியா ஆப்டெல் நிறுவனம் மற்றும் ட்ரூப் கம்ஃபர்ட்ஸ் நிறுவனம் (TCL) ஆகியவற்றில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த இடஒதுக்கீடு, ஏற்கனவே உள்ள முன்னாள் படைவீரர்களுக்கான ஒதுக்கீட்டுக்கு கூடுதலாக வழங்கப்படும்.

இந்த நடைமுறைகளை செயல்படுத்த ஏதுவாக, சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் தேவையான திருத்தங்கள்கொண்டு வரப்படும். பாதுகாப்புத்துறை சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களும், இதேபோன்ற திருத்தங்களை, தங்களது நிறுவனங்களின் சம்பந்தப்பட்ட ஆட்சேர்ப்பு விதிமுறைகளில் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பதவிகளுக்கு, அக்னிவீரர்களை தேர்வு செய்ய ஏதுவாக, தேவையான வயது தளர்வுகளும் வழங்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பும் சலுகைகளும்:

முன்னதாக, ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் ‘‘அக்னி பாதை’’ திட்டத்தை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த 13-ம் தேதி அறிமுகம் செய்தார். இந்தத் திட்டத்துக்கு இளைஞர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, பிஹாரில் ராணுவத்தில் சேருவதற்காக பயிற்சி பெற்று வந்த ஏராளமான இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிஹார், உ.பி., ஹரியாணா என வட மாநிலங்களில் ஆரம்பித்த போராட்டம் நேற்று தெலங்கானாவுக்கும் பரவியது. தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று தீவைத்தனர். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பிஹார் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 12 ரயில்களுக்கு தீவைக்கப்பட்டன. போராட்டம் நாடு முழுவதும் சுமார் 300 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, அக்னி பத் திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேருவதற்கான நுழைவு வயதில், இரண்டு ஆண்டுகள் தளர்வு அளித்து, 21-லிருந்து 23-ஆக உயர்த்தி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

மேலும், அக்னி பாதை திட்டத்தின் தேர்வாகி 4 ஆண்டுகள் அக்னி வீரர்களாக பணியாற்றிவிட்டு ஒப்பந்தம் முடிந்து வெளியேறும் வீரர்களுக்கு சிஏபிஎஃப் எனப்படும் மத்திய ஆயுதப் படை, மற்றும் அசாம் ரைஃபில்ஸில் படைப்பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

அத்துடன், முதல் பேட்ச் அக்னி வீரர்களுக்கு சிஏபிஎஃப், அசாம் ரைஃபில்ஸில் சேர 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும். அடுத்தடுத்த பேட்களில் வெளியேறுவோருக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதில் இருந்து 3 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருந்தாலும் நாடு முழுவதும் போராட்டம் சற்றும் குறையாத நிலையில் அக்னி பாதை எதிர்ப்புப் போராட்டம் வலுத்துவரும் நிலையில் பாதுகாப்புப் படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். இதனிடையே, சென்னையிலும் இன்று அக்னி பாதை எதிர்ப்பு போராட்டத்தில் தமிழக இளைஞர்கள் ஈடுபட்டதும் கவனிக்கத்தக்கது.