தாவூத் இப்ராகிம் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் - எம்.பி. பிரக்யா சிங் போலீசில் புகார்

19 June 2022

தனக்கு தாவூத் இப்ராகிம் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாக பிரக்யா சிங் தாக்கூர் எம்.பி. போலீசில் புகார் அளித்துள்ளார். போபால், மத்தியபிரதேச மாநிலம் போபால் தொகுதி பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர்.

இவர் தனக்கு தாவூத் இப்ராகிம் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். இஸ்லாமிய மத கடவுளின் இறை தூதர் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில் நுபுர் சர்மாவுக்கு பிரக்யா சிங் ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரக்யா சிங்கிற்கு சமீபத்தில் வந்த தொலைபேசி அழைப்பில் அவருக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுவது போன்ற ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த செல்போன் அழைப்பில் பிரக்யா சிங்கிடம் தன்னை தாவூத் இப்ராகிமின் சகோதரன் கும்பலை சேர்ந்தவர் என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நபர், இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவும் நீங்கள் விஷத்தை பரப்பி வருகிறீர்கள். நீங்கள் கொல்லப்படுவீர்கள் என்பதை மட்டும் உங்களிடம் தெரிவிக்கிறேன்' என செல்போன் அழைப்பில் பேசிய நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த செல்போன் அழைப்பை தொடர்ந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாக பிரக்யா சிங் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.