ஆள்மாறாட்டம் மூலமாக TNPSC தேர்வு எழுதியதாக மேலும் 26 பேர் கைது

19 October 2020

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு வழக்கில் முறைகேடாக தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 26 பேரை சிபிசிஐடி போலீசார் கைது ெசய்தனர். டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்தாண்டு நடந்த குரூப் 4 மற்றும் 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2ஏ, விஏஓ தேர்வுகளில் முறைகேடாக பலர் பணம் கொடுத்து ஆள்மாறாட்டம் மூலம் வெற்றி பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, டிஎன்பிஎஸ்சி கொடுத்த புகாரின் படி சிபிசிஐடி போலீசார் மூன்று வழக்குகளையும் ஏற்று விசாரணை நடத்தி வருகிறது. இந்த மூன்று வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளான காவலர் சித்தாண்டி, டிஎன்பிஎஸ்சி ரெக்கார்ட் கிளார்க் ஓம்காந்தன், இடைத்தரகர் ஜெயகுமார் உட்பட 51 பேரை கடந்த பிப்ரவரி மாதம் வரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு, குரூப் 2ஏ, குரூப் 4, பொறியாளர் பணி தேர்வுகள் என கடந்த 8 ஆண்டுகளில் 1,000 பேரிடம் பல கோடி ரூபாய் வசூலித்து குறிப்பிட்ட தேர்வு மையத்தில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதி வெற்றி பெற வைத்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் மோசடியாக தேர்வில் வெற்றி பெற்று 41 அரசு துறைகளில் பல்வேறு பணியிடங்களில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களாக பணியாற்றி வந்த நபர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் துறை ரீதியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விறுவிறுப்பாக நடந்த வந்த மோசடி வழக்கு கொரோனா காரணமாக 6 மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில் இந்த மூன்று மோசடி வழக்குகளையும் சிபிசிஐடி போலீசார் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த 10 நாட்களில் மோசடியாக வெற்றி பெற்று உள்துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த நபர் உட்பட 26 பேரை அதிரடியாக சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் படி, ராமநாதபுரம், கீழக்கரை உள்ளிட்ட தேர்வு மையங்களில் ஆள்மாறாட்டம் மூலம் தேர்வு எழுதிய 26 பேரை சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அனைவரிடம் தனித்தனியாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி அவர்களிடம் வாக்கு மூலம் பதிவு செய்தனர்.

7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கும் சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படும் நபர்களை கொரோனா காலத்தில் சிறையில் அடைக்காமல் நிபந்தனை ஜாமீன்களில் விடுவிக்கும் முறைப்படி, மோசடியில் கைது செய்யப்பட்ட 26 பேரையும் சிபிசிஐடி போலீசார் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர். இதுவரை குரூப்-4, குரூப்-2ஏ, விஏஓ தேர்வுகளில் ஆள்மாறாட்டம் மற்றும் மோசடி செய்ததாக 97 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 40 பேரை சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.