வடதமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் மழை

18 October 2020

சென்னை: வட தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கப்போகிறது. திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்க கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதனால் வட தமிழக கடலோர பகுதி மீனவர்கள் நாளை மறுதினம் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே நேற்றிரவு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.