தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

19 October 2020

சென்னை: வெப்பச் சலனம் மற்றும் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் கடந்த சில நாட்களாக நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காக்கிநாடா அருகே 2 நாட்களுக்கு முன்பாக கரை கடந்தது. அதற்கு பின், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவின் உள் மாவட்டங்களில் நிலை கொண்டு மழை பெய்யத் தொடங்கியது. இதனால், ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருகிறது. இது தவிர வெப்ப சலனம் காரணமாக ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருங்களூரு, தஞ்சாவூர் அடுத்த வல்லம் பகுதியில் 130 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் நீடித்து வரும் வெப்ப சலனம் காரணமாக வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது மன்னார் வளைகுடா வரை பரவியுள்ளது. அத்துடன், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதியில் குறைந்த காற்றழுத்தம் ஒன்று உருவாகியுள்ளது. இதனால் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும். இது தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களான திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், வங்கக் கடலில் இன்று ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உருவாகும்பட்சத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். இதனால், மத்திய கிழக்கு வங்கக்கடல் அதை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். மேலும் 20ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கல் அதை ஒட்டிய ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 55 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும். அதனால் மீனவர்கள், கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.