தமிழகத்தை கண்காணிக்கும் அமித் ஷா

27 May 2022

சென்னையில் பல்வேறு திட்டங்களுக்கான துவக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.


இந்த விழாவில் என்ன நடைபெறுகிறது என்பதை டெல்லியில் இருந்து கண்காணித்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பல்வேறு பதிவுகளை எழுதியுள்ளார். அதில், 'பிரதமர் மோடி மீது அன்பும் பாசமும் தமிழகத்தில் பெருகி வருகிறது. தமிழகம் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை விரும்புகிறது', என தமிழில் டுவிட் போட்டுள்ளார்.


இதனை தமிழ்நாடு ஆளுங்கட்சி தரப்பில் யாரும் எதிர்பார்க்கவில்லையாம். அமித் ஷாவை பொறுத்தவரை பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழா நிகழச்சி தொடர்பாக மோடியின் டுவிட்டர் பக்கத்தில் வரும் தகவல்களை அப்படி ரீ-டுவிட் செய்வது மட்டுமே வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் பிரதமர் மோடியின் நேற்றைய நிகழ்ச்சி தொடர்பாக அவரே தமிழில் டுவிட் போட்டுள்ளார். இந்த மாற்றம் ஏன் என டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, தமிழ்நாட்டிற்கு பிரதமர் மோடி இதற்கு முன்னர் வரும்போது திமுக எதிர்கட்சி வரிசையில் இருந்தது. அதனால் கோ பேக் மோடி என்ற வாசகத்தை டுவிட்டரில் சர்வதேச அளவில் ட்ரென்டிங் செய்வதை திமுக வழக்கமாக கொண்டு இருந்தது.


இந்த முறை தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியாக திமுக உள்ளது. அதனால் திமுகவின் ஐடி விங் நேரடியாக மோடிக்கு எதிராக டுவிட்டரில் களமிறங்கவில்லை எனக் கூறப்படுகிறது. உணர்ச்சி மிகுதியில் தொண்டர்கள் தங்கள் மன உணர்வுகளை டுவிட்டரில் மோடிக்கு எதிராக பயன்படுத்தினர். இது ஒருபுறமிருக்க, தமிழக பாஜக சார்பில் வணக்கம் மோடி என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் ட்ரென்டிங் செய்யப்பட்டது. இதில் தமிழகத்தை தாண்டி வெளிமாநிலங்களில் உள்ள பாஜக தொண்டர்களும் வணக்கம் மோடி என்பதை டிரென்டிங் செய்து வருவதாக திமுகவின் செய்தி தொடர்பாளர் ராஜூவ் காந்தி போன்றோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.


இது ஒருபுறமிருக்க, அமித் ஷா திடீர் என தமிழில் டுவிட்டர் போட்டுள்ளார் எனக் கேட்டதற்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் வாரத்திற்கு இரு முறையாவது அமித் ஷா பேசி வருகிறாராம். வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 10 தொகுதிகளை பாஜக கைப்பற்ற வேண்டும் என அண்ணாமலையிடம் அமித்ஷா கூறி வருகிறாராம். அதற்கு திமுக ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி என்ற பிம்பத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் எனக்கூறியுள்ளாராம். குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த அவர்களுக்கான மக்கள் செல்வாக்கு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம். இது பாஜகவிற்கு சரிவை ஏற்படுத்தும் என்பதால்தான் அடிக்கடி அண்ணாமலையுடன் அமித் ஷாவே நேரடியாக பேசி வருகிறாராம். பல அட்வைஸ்களையும் வாரி வழங்கி வருகிறாராம். இவர் மட்டுமல்ல, மோடியும் அடிக்கடி அண்ணாமலையுடன் மொபைல் பேசுகிறாராம்.


திமுக மாநில உரிமையை கையில் எடுத்து பேசி வருவது, பாஜகவிற்கு பெரும் நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனை மாற்றி அமைக்க வேண்டும். தேசிய சிந்தனை தமிழகத்தில் தலைத்தூக்க வேண்டும். அதற்கு ஆன்மீக அரசியல் செய்யுங்கள் என அண்ணாமலைக்கு தொடர் அசைன்மென்டுகள் டெல்லியில் இருந்து வந்த வண்ணம் உள்ளதாம். அண்ணாமலையின் ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக கண்காணித்து வரும் திமுக, அவருக்கு நேரடியாக பதில் அளிக்க வேண்டாம் என ஆரம்பத்தில் கருதியதாம். இப்போதே உதயநிதியை வைத்து அண்ணாமலைக்கு பதில் கொடுத்தால் என்ன என யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.