ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார்

07 April 2021

சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் காலை 7.05 மணிக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு காரில் வந்தார்.

அப்போது அவரை பார்ப்பதற்காக கூட்டம் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளுக்கு இடையே நடிகர் ரஜினிகாந்த் வாக்குச்சாவடிக்குள் சென்றார். வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்ப்புக்கு பிறகு அவருக்கு அலுவலர் ஒருவர் இடது கை விரலில் மை வைத்தார். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் தனது வாக்கை பதிவு செய்தார்.

பின்னர் அவர் பத்திரிகையாளர்களை பார்த்து கையசைத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி கேட்க முயன்றனர். ஆனால் அவர் வேகமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் எழிலன், பா.ஜ.க. சார்பில் குஷ்பு சுந்தரும், மக்கள் நீதி மையம் சார்பில் கே.எம்.ஷரீப் உள்பட 20 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.