விஷால் படம் ஓ.டி.டி.யில் ரிலீஸ்?

06 April 2021

கொரோனா திரைத்துறைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் பல படங்கள் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா படத்தையும் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த படம் பல வருடங்களாக பல்வேறு பிரச்சினைகளால் திரைக்கு வராமல் முடங்கி உள்ளது.

தற்போது தியேட்டர்களில் திரையிட்டால் கூட்டம் வருமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே ஓ.டி.டி. தளத்தை படக்குழுவினர் அணுகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஷாலுடன் அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார், சதா, பிரகாஷ்ராஜ், சோனுசூட், சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுந்தர்.சி. இயக்கி உள்ளார். ஏற்கனவே சூர்யாவின் சூரரை போற்று, ஜெயம் ரவியின் பூமி, விஜய்சேதுபதி நடித்துள்ள க.பெ.ரணசிங்கம், மாதவனின் சைலன்ஸ், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேசின் பென்குயின் ஆகிய படங்கள் தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி ஓ.டி.டி. தளங்களில் வெளிவந்தன. இதுபோல் திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு படமும் ஓ.டி.டி.யில் வெளியாகிறது.