ஈரான் தாக்குதல்: 190 ஏவுகணைகள் மற்றும் 1,110 டிரோன்கள் அழிக்கப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தகவல்
08 March 2026
ஈரான் நடத்திய தாக்குதலின் போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் 190 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 1,110 டிரோன்களை இடைமறித்து வெற்றிகரமாக அழித்துள்ளதாக அந்த நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதல் தொடங்கியதில் இருந்து மொத்தம் 205 ஏவுகணைகள் கண்டறியப்பட்டதில், 190 ஏவுகணைகள் அழிக்கப்பட்டன; 13 ஏவுகணைகள் கடலில் விழுந்தன, 2 ஏவுகணைகள் மட்டுமே நாட்டின் நிலப்பரப்பில் விழுந்தன. அதேபோல், கண்டறியப்பட்ட 1,184 ஈரான் டிரோன்களில் 1,110 இடைமறிக்கப்பட்டன. எஞ்சிய 74 டிரோன்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விழுந்தன. இந்தத் தாக்குதல்களில் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தியா, எகிப்து, பிலிப்பைன்ஸ் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 112 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டின் இறையாண்மையையும் பாதுகாப்பையும் உறுதி செய்யத் தங்களது ஆயுதப் படைகள் முழு தயார் நிலையில் இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.