"ஈரான் தலைவர்களைக் கொல்வதை நான் பெருமையாகக் கருதுகிறேன்" - அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி பேச்சு

13 March 2026

ஈரான் உடனான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத்' (Truth) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரானின் பயங்கரவாத ஆட்சியை ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியாக அமெரிக்கா முழுமையாக அழித்து வருவதாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், அவர்களின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல் திறன்கள் முடக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, கடந்த 47 ஆண்டுகளாக உலகெங்கிலும் அப்பாவி மக்களைக் கொன்று குவித்த ஈரான் தலைவர்களைத் தற்போது அழித்து வருவதை, அமெரிக்காவின் 47-வது அதிபராக தான் ஒரு கௌரவமாகவும் பெருமையாகவும் கருதுவதாக அவர் கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா போரில் வெற்றி பெறவில்லை எனத் தவறான தகவல்களைப் பரப்பும் ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ள டிரம்ப், ஈரானின் அதிகாரக் கட்டமைப்பைத் தாம் முழுமையாகத் துடைத்தெறிந்து வருவதாக உறுதிபடத் தெரிவித்துள்ளார்.