வளைகுடா நாடுகளில் 12-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து

15 March 2026

மத்திய கிழக்காசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் பாதுகாப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள வளைகுடா நாடுகளில் நடைபெறவிருந்த சி.பி.எஸ்.இ. (CBSE) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் 16 முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஓமன், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் நடைபெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தேர்வுகளும் தற்போது முழுமையாக ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் மதிப்பீட்டு முறை குறித்து பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என சி.பி.எஸ்.இ. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார். இதேபோல் சி.ஐ.எஸ்.சி.இ. (CISCE) அமைப்பும் அமீரகத்தில் ஐ.சி.எஸ்.இ. மற்றும் ஐ.எஸ்.சி. தேர்வுகளை ரத்து செய்துள்ள நிலையில், இந்த முடிவால் வளைகுடா நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் நிலவிய நிச்சயமற்ற சூழல் முடிவுக்கு வந்துள்ளது.