துருக்கி மீது மீண்டும் ஈரான் தாக்குதல்: நேட்டோ படைகள் ஏவுகணையை முறியடிப்பு
09 March 2026
மத்திய கிழக்கில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், துருக்கி வான்வெளியில் ஈரான் இரண்டாவது முறையாக ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானால் ஏவப்பட்ட இந்த இரண்டாவது ஏவுகணையை நேட்டோ (NATO) பாதுகாப்புப் படைகள் வெற்றிகரமாகத் தடுத்து அழித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
ஈரான் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைக் குறிவைத்துத் தாக்கி வரும் நிலையில், துருக்கி மீதான இந்தத் தொடர் தாக்குதல்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, துருக்கியின் அதானா பகுதியில் உள்ள தனது தூதரகத்தை அமெரிக்கா மூடியுள்ளதுடன், அங்குள்ள அத்தியாவசியமற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தென்கிழக்கு துருக்கியில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.