வேப்பமர தயாரிப்புகளில் கோடிகளில் வருவாய் ஈட்டும் இளைஞர்கள்!

25 February 2022

வேப்பமரத்தின் நன்மைகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து என பல்வேறு நாடுகள் இதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் வேப்பமரத்திற்கு அத்தனை முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பதே உண்மை.இந்தியாவில் வேப்பமரத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 35 டன் வேப்பங்கொட்டை பெறப்படுகின்றன. இதைக் கொண்டு ஆண்டிற்கு சுமார் 7 லட்சம் டன் எண்ணெய் தயாரிக்க முடியும்.வேப்பமரம் மனிதர்களுக்குக் கிடைத்த ஒரு அற்புத பொக்கிஷம். கிராமங்களில் வேப்ப மரங்கள் அதிகளவில் வளர்கின்றன. இருப்பினும் இதன் மகத்துவத்தை மக்கள் உணரவில்லை. வேப்பமரத்தின் தயாரிப்புகள் காய்ச்சல், மலேரியா, வலி போன்றவற்றிற்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது. இவைதவிர காஸ்மெடிக்ஸ், உரம், சோப்பு தயாரிப்பு என இதன் பயன்பாடு விரிவடைந்துகொண்டே செல்கிறது.


வேப்பமரத்தில் ஜனவரி-ஃபிப்ரவரி மாதங்களில் பூ பூக்கும். மே-ஜூன் மாதங்களில் பழங்கள் வளரத் தொடங்கும். ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பழங்கள் பழுக்கும். வேப்பம்பழம் பிசுபிசுப்பித்தன்மையுடன் சற்று இனிப்பாக இருக்கும். பழுத்த வேப்பம்பழம் 24 சதவீதம் சதைப்பற்று கொண்டதாகவும் 47 சதவீதம் கூழாகவும் 19 சதவீதம் தடிமனான கொட்டைப்பகுதியுடனும் 10 சதவீதம் விதையும் கொண்டிருக்கும்.வேப்பமரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களின் சந்தை மதிப்பு தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.


இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து சீனா 14 மில்லியன் ஹெக்டேர் அளவில் வேப்பமர சாகுபடி செய்து வருகிறது.தற்போது இந்தியாவில் இளைஞர்கள் சிலர் இதில் ஆர்வமாக ஈடுபட்டு லாபம் ஈட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. புனே, மத்தியப்பிரதேசம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இதை வணிகமாக முன்னெடுத்து லாபம் ஈட்டி வருகின்றனர்.புனேவைச் சேர்ந்தவர் ரமேஷ் கல்த்கர். இவர் கல்த்கர் கிராமத்தில் வசிக்கிறார். இவர் பிஎஸ்சி ஃபாரஸ்ட்ரி பட்டப்படிப்பு முடித்ததும் ஆயுர்வேத நிறுவனத்திலும் அரசின் சுற்றுலாத் துறையிலும் வேலை பார்த்து வந்தார்.ரமேஷ் கல்த்கர்சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்ட இவர், மூன்றாண்டுகளுக்கு முன்பு வேப்பமரத் தயாரிப்புகளில் கவனம் செலுத்தத் தீர்மானித்தார்.


அக்ரி கிளினிக், அக்ரி பிசினஸ் செண்டர் போன்றவற்றில் பயிற்சியெடுத்துக் கொண்டார். வேப்பம் புண்ணாக்கு தயாரிக்கும் நிறுவனத்தைப் பார்வையிட்டார்.அதைத் தொடர்ந்து 48 லட்ச ரூபாய் முதலீடு செய்து வேப்ப எண்ணெய், வேப்ப புண்ணாக்கு ஆகியவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கினார். நல்ல வரவேற்பு கிடைத்தது. முதலில் 300 MT வேப்பம் புண்ணாக்கும் 500 லிட்டர் வேப்ப எண்ணெயும் தயாரித்தார். 22 லட்ச ரூபாய் லாபம் கிடைத்தது. படிப்படியாக வளர்ச்சியடைந்து இன்று 21 ஆர்கானிக் தயாரிப்புகள் விற்பனை செய்கிறார்.


இன்று இவரது நிறுவனத்தின் ஆண்டு டர்ன்ஓவர் 2 கோடி ரூபாய்.இவரைப் போன்றே மத்தியப்பிரதேசத்தின் குஜாரி கிராமத்தைச் சேர்ந்த இளைஞரான அபிஷேக் கார்க் ஒரு தொழிற்சாலை அமைத்துள்ளார். இந்தத் தொழிற்சாலையில் இவர் தயாரிக்கும் வேப்ப எண்ணெயும் வேப்பம் புண்ணாக்கும் பல மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.ஆண்டிற்கு 50 டன் வேப்ப எண்ணெயும் 700 டன் வேப்பம் பொடியும் இவரது தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இவர் ஏராளமானோருக்கு வேலை வாய்ப்பும் வழங்கியுள்ளார்.