அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரியலாம் - மத்திய அரசு அனுமதி

17 April 2021

புதுடெல்லி:

மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை ஆகிய அமைச்சகங்கள் தங்களின் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலகத்துக்கு குறித்த நேரத்துக்கு வருவதில் இருந்து தளர்வு தரப்படுகிறது. அதே நேரம் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் அதிகாரிகள் வசித்தால் அவர்கள் அலுவலகத்துக்கு வருவதை தவிர்க்க வேண்டும். அதிகாரிகள், அலுவலர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் போது காலை 9 மணி முதல் 5.30 மணி வரை, 9.30 மணி முதல் 6 மணி வரை, காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை என 3 விதமான நேரங்களில் பணிபுரியலாம்.

இதே காலவரையறையை மத்திய அரசின் சுயாட்சி அமைப்புகளும், ஊடக பிரிவும், பொதுத்துறை நிறுவனங்களும் பின்பற்றலாம். மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில் அலுவலகத்துக்கு வரும் ஊழியர்கள் ஒரே நேரத்துக்குள் வராமல் 9 மணி முதல் 10 மணிக்குள் வரலாம். கூட்டமாக அலுவலகத்துக்கு வருவதையும், லிப்ட், அலுவலக படிகளில் கூட்டமாக ஏறுவதையும் தவிர்க்க வேண்டும்.

செயலர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அதிகாரிகள் வீட்டில் இருந்தே பணிபுரியலாம். குறிப்பிட்ட இடைவெளியில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். செயல் அந்தஸ்துக்கு மேல் உள்ள அதிகாரிகள் அலுவலகம் வருவதில் விலக்கு இல்லை. நோய் கட்டுப்பாடு பகுதியில் இருப்பவர்கள் அலுவலகத்திற்கு வர கூடாது. அலுவலகங்களில் தனி மனித இடைவெளியை பின்பற்றுவது, முககசவம் அணிவது உள்ளிட்டவை கட்டாயம்.