உண்மையான வெற்றியாளர்கள் யார்?

11 April 2021

"நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையவர்கள் என்றால், மிக்க உள்ளச்சத்தோடு தொழுவார்கள், வீணான காரியத்தில் இருந்து விலகி இருப்பார்கள். ஜகாத் கொடுத்து வருவார்கள், தங்கள் மர்ம ஸ்தானத்தைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் தங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களையும் தங்களுடைய வாக்குறுதிகளையும் பேணிக்காத்து நடப்பார்கள்” (திருக்குர்ஆன் 23:1-8)


இப்படிப்பட்ட பண்பு கொண்டவர்கள் தான் வெற்றியாளர்கள் என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக குறிப்பிடுகிறது. இது அனைத்து மக்களுக்கும் அறநெறியைப் போதிக்கின்ற, நேர்வழியைக் காட்டுகின்ற உபதேசமாகவே அமைந்துள்ளது. நம் வாழ்வியலை அதனோடு ஒப்பிட்டு சுய பரிசோதனை செய்து பார்த்தால் நாம் வெற்றியாளரா இல்லையா என்பதை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.


ஒருவர் வெற்றியாளராக திகழ என்ன செய்யவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதில் முக்கியமானது இறையச்சத்துடன் கூடிய இறைவணக்கம். எனவே, நம்மைப் படைத்து, பாதுகாக்கின்ற அல்லாஹ்வுக்கு நாம் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும். இந்த உணர்வில், உள்ளச்சத்தோடு தொழுது இறைவனுக்கு நன்றி செலுத்தினால் மனதில் தெளிவான சிந்தனை தோன்றும். உலக ஆசைகளுக்கு ஆட்படாமல் உறுதியான நிலையில் அல்லாஹ்வை வணங்கும் போது அந்த ஏக இறைவன் மகிழ்கின்றான். அவனது அருளால் நமது வாழ்வு வெற்றிப்பாதையை நோக்கி செல்லத்தொடங்கும்.


ஒருவர் நற்காரியங்கள் செய்ய நினைத்தாலும் அதற்கு தடைபோடுகின்ற எத்தனையோ கேளிக்கைகள். வீண் விளையாட்டுகள், ஆடம்பர பொருட்கள் உள்ளன. உள்ளங்கைக்குள் உலகத்தை கொண்டுவந்த செல்போன்களே இன்று பல்வேறு சீர்கேடுகளுக்கு காரணமாய் அமைந்துவிட்டது. சிறுவர்கள் முதல் முதுமையைத் தொட்டு நிற்பவர்கள் வரை கைபேசிகளில் கலாசார பண்பாட்டை இழந்து கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட காரியங்களில் இருந்து இறைநம்பிக்கை கொண்டவர்கள் விலகி இருப்பார்கள். நல்ல விஷயங்களில் தங்கள் நேரத்தை செலவிடுவார்கள், சமுதாயம் மேம்பட வழி திறப்பார்கள்.


அடுத்து அவர்கள், தாங்கள் ஈட்டிய வருமானங்களில் இருந்து ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தை ‘ஜகாத்’ எனும் ஏழை வரியாக தானமாக கொடுத்து விடுவார்கள். இதன்மூலம் ஏற்றத்தாழ்வு இல்லாத சமநிலை சமுதாயம் உருவாக உதவுவார்கள்.


கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் வணிகத்தில் ஈடுபடும் போது கிடைக்கும் லாபத்தை நான்கு பகுதியாக பிரிப்பார்கள். அதில் ஒன்றை தனக்காகவும், மற்றதை உறவுக்காகவும், மூன்றாமதை மீண்டும் முதலீடு செய்யவும், நாலாமதை ஏழைகளுக்கு தானமாகவும் அளித்து விடுவார்கள். இதைத்தான் திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது. இவ்வாறு சமுதாய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் பாதையில் பயணிக்கும் அனைவருமே வெற்றியாளர்கள் தான்.


தற்கால கலாசார சீர்கேடுகளுக்கெல்லாம் முழுமுதற் காரணம் மது மற்றும் மனம்-உடல் இச்சைகள். அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு அந்த இச்சையை ஒருவன் துறந்து விடும் போது பாலுணர்ச்சிகளினால் தூண்டப்படும் பாதகங்களை தடுக்க முடியும். வன்மம் இல்லாத உலகை உருவாக்க அது வழி கோலும். அதற்கு உடந்தையாய் இருப்பவர்கள் வெற்றியாளர்கள்.


உயர்ந்த குணங்கள் கொண்டவர்கள், நம்பிக்கையின் அடிப்படையில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதப் பொருட்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உரியவரிடம் பெற்ற அதே நிலையில் ஒப்படைப்பார்கள். அவ்வாறு இறையச்சத்துடன் அமானிதங்களை பேணிக்காத்து, நம்பிக்கையை நாம் வலுப்படுத்தி வந்தால் அவர்களும் வெற்றியாளர்களே.


கொடுத்த வாக்குறுதியை எப்பாடு பட்டாவது காப்பாற்றுபவர்களும் வெற்றியாளர்கள் பட்டியலில் இடம்பிடிக்கிறார்கள். நிறைவேற்ற முடியாத, நிறைவேற்றும் எண்ணம் இல்லாமல் வாக்குறுதிகளை அள்ளி வீசும் குணம் கொண்ட மக்கள், சமூகங்களின் எல்லாத் தட்டுகளிலும் நிறைந்துள்ளனர். அவர்கள் ஒருபோதும் வெற்றியாளர்களாக ஆக முடியாது.


அருள்மறை திருக்குர்ஆன் ஒரு வசனத்தில் ஆறு பண்புகளைச் சொல்லி அதனைப் பேணிப் பாதுகாப்பவர்களே வெற்றியாளர்கள் என்று வரையறுத்துச் சொல்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்த வசனத்திலேயே, இவர்கள் தான் சொர்க்கத்தை சொந்தம் கொண்டாடும் உரிமை பெற்றவர்கள் என்றும் நற்செய்தி கூறுகிறது.


அப்படிப்பட்ட உயர்ந்த பண்பை நம்மில் வளர்த்து, இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்புடைய வெற்றியாளர்களாக வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக, ஆமின்.