வலிமையானவர் யார்?

10 April 2021

நம்மை நோக்கி யாராவது ஒருவர் "நீங்கள் வலிமையானவரா?” என்ற கேள்வியைக் கேட்டால் நமக்கு எப்படி இருக்கும்?

வலிமை என்றால் உடல் வலிமையா?, அல்லது மன வலிமையா?

உடல் வலிமை என்றால் உறுதியான உடல் அமைப்பு கொண்டவர், தன்னை வலிமையானவர் என்று கருதலாம். மன வலிமை என்றால், மன உறுதி கொண்டவர் தன்னை வலிமையானவர் என்று குறிப்பிடலாம்.

ஆனால், இஸ்லாம் பார்வையில் இந்த கேள்விக்கு பதில் என்ன தெரியுமா?

இது தொடர்பாக நபி மொழிகளும், திருக்குர்ஆனும் என்ன சொல்கின்றன என்பது குறித்து இங்கு நாம் பார்க்கலாம்.

இந்த உலகிலும், மறு உலகிலும் வலிமை மிக்கவர் யார் என்றால் அது ஏக இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். இதையே திருக்குர்ஆன் (42:19) குறிப்பிடும்போது: "அல்லாஹ் தன் அடியார்கள் பால் அன்பு மிக்கவனாக இருக்கிறான்; தான் நாடியவர்களுக்கு (வேண்டிய) உணவளிக்கிறான்; அவனே வலிமை மிக்கவன்; (யாவரையும்) மிகைத்தவன்”.

நம்மைப்படைத்த இறைவன் நமக்கு உணவளிக்கின்றான். நம்மை பராமரித்து, வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றான். அவனுக்கு இணை எதுவும் கிடையாது. அவன் அனைவரையும்விட பலம் மிக்கவன். அந்த வலிமை மிகுந்த இறைவன் முன்பு நாம் மிகவும் பலவீனமானவர்கள். அவனுடைய அருள் இன்றி நம்மால் எதுவும் செய்ய முடியாது.

இருந்தாலும், மனிதர்களில் வலிமைமிக்கவர் யார் என்பதையும் அந்த ஏக இறைவன் சுட்டிக்காட்டுகின்றான். இதற்கு முதல் தேவை- நாம் பயபக்தி உள்ளவர்களாக இருக்கவேண்டும். வல்லமை மிக்க இறைவன் மீதும், அவனது சக்தி மீதும் நாம் நம்பிக்கையும், அச்சமும் கொள்ள வேண்டும். வறுமை-செல்வம் என எந்த நிலையில் இருந்தாலும் இறைவனின் பாதையில் செலவு செய்ய வேண்டும். கோபத்தை அடக்கிக்கொள்ள வேண்டும். நம்மைச்சார்ந்தவர்கள் ஏதேனும் பிழை செய்தால் அதை பொறுத்துக்கொண்டு மன்னிக்கும் மனப்பக்குவத்துடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களைத்தான் அல்லாஹ் நேசிக்கின்றான்.

இதையே திருக்குர்ஆன் இவ்வாறு சுட்டிக்காட்டுகிறது:

"(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன் 3:134)

"என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்” (என்றும் எச்சரித்துக் கூறினார்). (திருக்குர்ஆன் 11:52).

நபி (ஸல்) அவர்களும் வலிமை பற்றி குறிப்பிடும் போது, இவ்வாறு கூறினார்கள்: "வலிமை என்பது தாக்குவதைக் கொண்டல்ல. வலிமையானவர் யாரெனில் கோபம் ஏற்படும் சமயத்தில் தனது மனதைக் கட்டுப்படுத்துபவரே”. (நூல்: புகாரி)

அதேநேரத்தில் இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஏதேனும் அச்சுறுத்தல், ஆபத்து வந்தால் அதற்காக கோபத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. கோபம் என்பது சுய நலனுக்காக அல்லாமல் மார்க்கத்திற்காக வெளிப்படலாம்.

நாம் வலிமையானவர்களாக இருக்க வேண்டும்? எதில் தெரியுமா?

ஏக இறைவனின் கொள்கைகளை பின்பற்றுவதில், இறையச்சம் கொள்வதில், இறைவன் வகுத்த கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் ஆகிய கடமைகளை நிறைவேற்றுவதில் வலிமையுடன் இருக்க வேண்டும்.

அறியாமல் செய்யும் பிறரின் தவறுகளையும், பிழைகளையும் பொறுத்துக்கொண்டு மன்னிக்கும் மன வலிமையுடன் திகழ வேண்டும்.

தேவை உள்ளவர்களுக்கு கொடுத்து உதவும் வல்லமை மிக்க மனவலிமையுடன் வாழ வேண்டும். உற்றார்களையும், உறவினர்களையும், மற்றவர்களையும் அரவணைத்து அன்பு செலுத்தும் மனவலிமை உள்ளவர்களாக வாழ வேண்டும்.

இத்தகைய குண நலன் மிக்கவர்களாக, வலிமை மிக்கவர்களாக நம் அனைவருக்கும் நல்வாழ்க்கையை தந்தருள அந்த ஏக இறைவனை வேண்டுவோம்.