கர்ணன் திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட சம்பவம்: உண்மையில் அங்கு நிகழ்ந்தது என்ன?

15 April 2021

ஒரு சிறிய தீப்பொறி தீப்பிளம்பான கதை! அப்படி என்ன நடந்தது விரிவாக பார்க்கலாம்! 

தென் தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் அது. கலவர பூமியானது தென்தமிழகம். முன்னால் முதல்வர்  ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க. அரசு 1995 -ல் ஆட்சியில் இருந்த நேரம் அது .தமிழகத்தின் திருநெல்வேலியில் நடந்த சில சாதாரண நிகழ்வுகள் அடுத்த சில மாதங்களுக்கு அந்தப் பிராந்தியத்தையே பற்றி எரியச் செய்தன. அதன் உச்சகட்டமாக கொடியங்குளம் சம்பவம் நடைபெற்றது.இந்தக் கலவரங்களின் துவக்கப்புள்ளியாக அமைந்த நிகழ்வு நடந்தது 1995ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி. திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடியிலிருந்து சுரண்டை வரை செல்லும் பேருந்து வீரசிகாமணி என்ற கிராமம் வழியாக சென்றுகொண்டிருந்தது.
 தங்கவேலு என்கிற 53 வயதான  ஓட்டுநர் பேருந்தை இயக்கி வந்தார். வீரசிகாமணி என்கிற ஊர் அ ருகே வரும்போது சாலையில் சென்றுகொண்டிருந்த மாணவர்கள் பேருந்தை மறைக்கும் வகையில் சென்று கொண்டிருந்தனர். ஹார்ன் அடித்தும் கேட்கவில்லை. இதையடுத்து, பேருந்தைவிட்டு இறங்கிய தங்கவேலு அவர்களை ஒதுங்கிச் செல்லும்படி கூறினார். இதில் வார்த்தைகள் முற்றின.
இந்த மாணவர்கள் அனைவரும் நடுவக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எல்லோருமே தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள். ஓட்டுநர் தங்கவேலு பக்கத்து ஊரான வடநத்தம்பட்டியைச் சேர்ந்தவர். தேவேந்திரகுல வேளாளர் ( பள்ளர்) இனத்தைச் சேர்ந்தவர்.
ஓட்டுநர் உடன் ஏற்பட்ட மோதலைப் பற்றிக்  ஊரில் கூறினர். அந்தப் பேருந்து சுரண்டை வரை சென்றுவிட்டு திரும்பி வந்தபோது நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள் அரிவாளுடன் வீரசிகாமணி அருகே காத்திருந்தனர். பேருந்து நிறுத்தப்பட்டு, தங்கவேலு கடுமையாகத் தாக்கப்பட்டார். சமாதானம் செய்ய முயன்ற நடத்துனரும் தாக்கப்பட்டார். இப்படியாகத்தான் கலவரத்திற்கான முதல் விதை விதைக்கப்பட்டது.தங்கவேலு தாக்கப்பட்டதைக் கேள்விப்பட்டதும் வடநத்தம்பட்டியைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆயுதங்களுடன் வீரசிகாமணியை நோக்கிச் சென்றனர். அவர்கள் அங்கே சென்றபோது மின்சாரம் இல்லை.
இதையடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் பேராசிரியர் கே.ஏ. மணிக்குமார் எழுதிய Judge Gomathinayagam Inquiry Commission: A Study ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

வீரசிகாமணிக்குச் சென்ற பள்ளர் கள் அங்கு பெரிய தாக்குதலை நடத்தினர். ஒருவர் கத்தியால் குத்தப்பட்டார். அங்கிருந்த முத்துராமலிங்கத் தேவர் சிலையும் சேதப்படுத்தப்பட்டது.
இதையடுத்து சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்னைய்யன் தலைமையிலான அணி ஒன்று வடநத்தம்பட்டிக்குள் புகுந்து பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரையும் தாக்கியது. வடநத்தம்பட்டியைச் சேர்ந்த தேவேந்திரர்கள் 18 பேர் மீதும் நடுவக்குறிச்சியைச் சேர்ந்த தேவர்கள் 15 பேர் மீதும் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.


தேவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் திருநெல்வேலி மாவட்டம் முழுவதுமே பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஜூலை 29ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வி.கே. ஜெயக்கொடி சங்கரன்கோவிலில் அமைதிக் கூட்டம் ஒன்றை நடத்தினார்.
ஆனால், அ.தி.மு.க. அரசு தேவர் இனத்தினருக்கு சாதகமாக இருப்பதாகக் கூறிய பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்கள் ) அந்த அமைதிக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற தேவர் சமூகப் பிரதிநிதிகள், சேதப்படுத்தப்பட்ட தேவர் சிலையை சீரமைத்துத் தர வேண்டுமெனக் கோரினர். அதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஒப்புக்கொண்டது.
ஆனால் பிரச்சனை இதோடு முடியவில்லை. மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை மீறி, தேவர் பேரவை என்ற அமைப்பு பஸ் மறியலில் இறங்கியது. ஜூலை 30ஆம் தேதி 12 இடங்களில் பேருந்துகள் மறிக்கப்பட்டன. சென்னை, மதுரை, நாகர்கோவிலில் இருந்துவந்த பேருந்துகள் பல்வேறு இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டன. தாளையூத்து, பாளையங்கோட்டையில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டன.
நெல்லை மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்த நிலையிலும், கவலரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை பெரிதாக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. கலவரத்தைத் தூண்டும் நபர்களைக் கண்டறித்து தடுத்து நிறுத்தவும் முயற்சிக்கவில்லை.
அடுத்ததாக தேவேந்திர குல வேளாளர்களை இழிவுபடுத்தும் வாசகங்களுடன் பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த எம்எல்ஏவான கோபாலகிருஷ்ணன் திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்கு அருகில் அடையாளம் தெரியாத நபர்களால் ஜூலை 31ஆம் தேதி வெட்டிக்கொல்லப்பட்டார்.
இதையடுத்து பேருந்து நிலையத்தில் தேவர்களுக்கு சொந்தமாக இருந்த கடைகள் பள்ளர்களால் சூறையாடப்பட்டன. பேருந்துகள் ரத்துசெய்யப்பட்டு, அந்த இடமே மயானக் காட்சியளித்தது. 18 பேர் கைதுசெய்யப்பட்டனர்.இதையடுத்து, தென்காசியிலும் தேவர்கள் பேருந்துகளை மறித்தனர்.
தென்காசியில் உள்ள சிவகிரியில் இருந்த அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து, அதற்குப் பொறுப்பானவர்கள் எனக் குற்றம்சாட்டி, மூன்று தேவர்களை பிடித்து பள்ளர்கள் தாக்கினர். இதற்குப் பிறகு வாசுதேவநல்லூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ ஈஸ்வரனுக்குச் சொந்தமான மண்ணெண்ணெய் டிப்போ தீ வைத்து கொளுத்தப்பட்டது.
தொடர்ந்து தேவர்களும் பள்ளர்களும் ஆங்காங்கே மோதிக்கொள்ள இரு தரப்புக்கும் காயம் ஏற்பட்டது. சிவகிரியில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒருவர் கொல்லப்பட, ஏழு பேருக்குக் காயம் ஏற்பட்டது.


ஆகஸ்ட் 1ஆம் தேதி கலவரம் திருநெல்வேலி மாவட்டம் முழுக்கப் பரவியது. தென்காசி பாவூர்சத்திரத்தில் இருந்த தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து முழு அடைப்புக்கு தேவர் பேரவை அழைப்பு விடுத்தது. அன்றைய தினம் கயத்தாறு, வெள்ளையங்கோட்டை பகுதிகளில் கலவரம் நடந்தது. பாளையங்கோட்டையில் காவல்துறை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
இந்தக் கலவரங்களால் திருநெல்வேலி மாவட்டமே முடங்கிப்போனது. பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பள்ளிகள், கடைகள் மூடப்பட்டன. அமைதிக் கூட்டம் பலனளிக்காத நிலையில், கலவரத்தில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்ய முடிவெடுத்தது மாவட்ட நிர்வாகம். ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் இரு தரப்பையும் சேர்ந்த 260 பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 110 பேர் பேருந்துகளில் கல் எறிந்த குற்றச்சாட்டிலும் மீதமுள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் கைதுசெய்யப்பட்டனர்.பள்ளர்
(தேவேந்திர குல வேளாளர்)களைப் பழித்து பேருந்துகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், திருநெல்வேலியில் மட்டும் இருந்த கலவரம் பக்கத்து மாவட்டமான தூத்துக்குடிக்கும் பரவியது. புளியம்பட்டியில் தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டிற்கு ஆகஸ்ட் ஐந்தாம் தேதியன்று 20க்கும் மேற்பட்ட பள்ளர்  தீ வைக்க, புளியம்பட்டியிலும் சீவலப்பேரியிலும் கலவரம் பரவியது. சீவலப்பேரியிலும் தேவர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் வீட்டில் தீ வைக்கப்பட்டது. இரண்டு தேவர்கள் தாக்கப்பட்டனர். அதே நாளில் அரசுப் பேருந்து உட்பட சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்தக் கலவரங்களின் உச்சகட்டமாக ஆகஸ்ட் 25ஆம் தேதி ஸ்ரீ வைகுண்டம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பலவேசம் என்ற பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர் அவரது மனைவி முன்பாகவே தீ வைத்துக் கொளுத்தப்பட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் பதற்றம் தொற்றியது. இதையடுத்து ஆளந்தா, கொடியங்குளம், காசிலிங்கபுரம் கிராமங்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பள்ளர்கள் ஒன்றுதிரண்டு சிங்காத்தாகுறிச்சியில் இருந்த தேவர்களின் வீடுகளைத் தாக்கினர். இந்த கலவரக்காரர்கள் காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்பட்டது. இதையடுத்து காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது.சிங்கத்தாகுறிச்சி, காசிலிங்கபுரம், ஆளந்தா பகுதிகளில் காவல்துறை பெருமளவில் காவலர்களை நிறுத்தியது. சிங்கத்தாகுறிச்சியைச் சேர்ந்த 7 தேவர்களைக் காவல்துறை கைதுசெய்தது. இதையடுத்து தேவர்கள் போராட்டக் களத்தில் இறங்கினர். இது மிகப் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக பக்காபட்டியில் உள்ள பள்ளர்களுக்குச் சொந்தமான வாழைத் தோட்டங்கள் ஆகஸ்ட் 26ஆம் தேதி அழிக்கப்பட்டன. புகார் கொடுத்தும் காவல்துறை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. தேவர்கள் அதிகம் வசிக்கும் நாணல்காடு கிராமத்தில் இருந்த பள்ளர்களின் வீடுகள் தாக்கப்பட்டபோது அங்கிருந்த காவலர்கள் அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இந்த நிலையில் நாரைக்கிணறுக்கு அருகில் வெள்ளைத்துரை தேவர் என்பவர் தேவேந்திரர்களால் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று தாளையூத்தில் ரயிலில் வந்திறங்கிய பள்ளர்  இனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தேவர்களால் கொல்லப்பட்டனர்.

காவல்துறையின் ஆபரேஷன் வீனஸ் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பாக கொடியங்குளம் கிராமத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் இருக்கிறது கொடியங்குளம் கிராமம். 1995வாக்கில் அந்த கிராமத்தில் 287 பள்ளர் (தேவேந்திர குல வேளாளர்கள்) வசித்தனர். அந்த ஊரைச் சேர்ந்த 102 பேர் வெளிநாடுகளில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 40 பேர் வளைகுடா நாடுகளில் இருந்து ஊர் திரும்பியிருந்தனர். அந்த கிராமத்தில் பராக்கிரம பாண்டியன் குளம் என்ற பெரிய கண்மாய் ஒன்று இருந்தது. அதிலிருந்து வந்த தண்ணீரை வைத்து விவசாயமும் செய்துவந்தனர். இதனால், அந்த கிராமம் வளமான ஒன்றாகவே இருந்தது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இது போன்ற முழுக்க முழுக்க பள்ளர்  வசித்த கிராமங்களில், எழுத்தறிவு என்பது மாவட்ட, மாநில சராசரியைவிட அதிகமாகவே இருந்தது. பல பெண்கள், பட்டப்படிப்பையும் பட்ட மேற்படிப்பையும் முடித்திருந்தனர். இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், துபாய், மஸ்கட், சவுதி, குவைத் போன்ற வளைகுடா பகுதிகளிலும் வட இந்திய மாநிலங்களிலும் பணியாற்றினர். படிப்பு, வசதி ஆகியவற்றின் காரணமாக இந்த கொடியங்குளம் கிராமம், மற்ற தேவேந்திரகுல வேளாளர்கள் கிராமங்களுக்கு ஒரு தலைமையான கிராமத்தைப்போல விளங்கியது.
இந்த நிலையில்தான் மாவட்ட நிர்வாகம் 'ஆபரேஷன் வீனஸ்' என்ற நடவடிக்கையைத் துவங்கியது. கொடியங்குளத்தில் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையின் நோக்கம், கொலைக்குற்றத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படும் சிலரைத் தேடுவதும் கொடியங்குளம் கிராமத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் ஆயுதங்களைக் கைப்பற்றுவதும்தான்.
ஆனால், இந்த கிராமத்தை அரசு வேண்டுமென்றே தேர்வுசெய்ததைப்போலத்தான் தோன்றியது. இந்தத் ஆபரேஷன் வீனஸ் அந்த கிராமத்தில் நான்கு மணி நேரம் நடைபெற்றது. காவல்துறையின் தாக்குதல்.
அந்தத் தருணத்தில் கணபதி என்பவர் கொடியங்குளம் கிராமத்தின் தலைவராக இருந்தார். சம்பவ தினத்தன்று 24 வாகனங்களில் காவல்துறையினருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ. பன்னீர்செல்வம், காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார் சிங் ஆகியோர் கிராமத்திற்கு வந்தனர். அவர்களை ஊர்த் தலைவர் வரவேற்று, மாவட்ட ஆட்சித் தலைவரும் எஸ்பியும் உட்கார்வதற்கு நாற்காலிகளையும் கொடுத்தனர். ஆனால், அவர்கள் விரோதமான பாவனையிலேயே செயல்பட்டதாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி தேசிய மனித உரிமை ஆணையத்திடம் அளித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டார்.
"வெங்கடேஷ் என்பவர் கொண்டுவந்த நாற்காலியைப் பிடுங்கி அவர் மீதே தூக்கியெறிந்தனர். கீழே விழுந்த வெங்கடேஷ் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதனைத் தடுத்த அவரது தாயாரையும் கடுமையான வார்த்தைகளால் காவல்துறையினர் ஏசினர். ஊர்த் தலைவருக்கு அருகில் இருந்த கோட்டை மாடசாமியும் தாக்கப்பட்டார். அவரது தோளில் இருந்த துண்டை எடுத்து அவரது கழுத்தை நெறித்தனர். லத்தியாலும் அவர் தாக்கப்பட்டார். தடுக்கவந்த கணபதிக்கும் அடிவிழுந்தது. இதையடுத்து ஊர் மக்கள் அங்கிருந்து விலகி ஓடி வீடுகளுக்குள் புகுந்து தாளிட்டுக்கொண்டனர்" என தனது வாக்கு மூலத்தில் குறிப்பிட்டார் கே. கிருஷ்ணசாமி.இந்தத் தாக்குதல் சம்பவத்தின்போது காவல்துறையினர் சுட்டதில் பால்துரை என்பவர் காலிலும் கனி என்பவரது காதிலும் காயம் ஏற்பட்டது. இதற்குப் பிறகு ஒவ்வொரு வீடாக கதவுகளை உடைத்து உள்ளே புகுந்த காவல்துறையினர், அங்கிருந்த அனைவரையும் ஆண், பெண், குழந்தைகள் வித்தியாசம் பார்க்காமல் தாக்கினர். பலரது தாலிகள் பறிக்கப்பட்டன. 
காவல்துறை வரக்கூடுமென அறிந்து பல ஆண்கள் கிராமங்களை விட்டு வெளியேறியிருந்தனர். இதனால், பெரும்பாலும் பெண்களே இந்தத் தாக்குதலை எதிர்கொண்டனர். அங்கிருந்த ரேஷன் கடையில் இருந்த விற்பனையாளரும் தாக்கப்பட்டார். விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது மண்ணெண்ணை ஊற்றப்பட்டது. அங்கிருந்த ஒரே கிணற்றில் பாலிடால் உற்றப்பட்டது. வீடுகளில் இருந்த டிவி, விசிஆர், ஃபேன், கிரைண்டர், ஃப்ரிட்ஜ் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன என்கிறது கிருஷ்ணசாமி அளித்த வாக்குமூலம்.
இதற்குப் பிறகு பியுசிஎல் அமைப்பு தாக்குதலால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்குள் சென்று விசாரித்து, குடியரசுத்தலைவருக்கு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையின்படி, கொடியங்குளத்தில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக மாவட்ட எஸ்பி சுனில் குமாரால் வழிநடத்தப்பட்ட சிறப்பு ஆயுதப் படையானது ஆளந்தா, காசிலிங்கபுரம் கிராமங்களிலும் தேவேந்திரர் இல்லங்களை குறிவைத்து சூறையாடியதாக குற்றம்சாட்டியது.
ஆகவே அப்போது மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ஏ. பன்னீர்செல்வம், காவல்துறை கண்காணிப்பாளர் சுனில் குமார் சிங் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த விவகாரம் குறித்து மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் பியுசிஎல் கோரியது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை வேறு கதையைச் சொன்னது. அதாவது தாங்கள் கொடியங்குளத்திற்குச் சென்றபோது தங்களை வழிமறித்த கிராமத்தினர், கைதுசெய்து வைக்கப்பட்டுள்ள தங்கள் கிராமத்தைச் சேர்ந்த 24 பேரையும் விடுவிக்க வேண்டுமெனக் கோரியதாகவும் இது மோதலில் முடிந்ததாகவும் காவல்துறை கூறியது. இதன் பிறகு கிராமத்தினரின் ஒரு பகுதியினர் நாட்டு வெடிகுண்டுகளை தங்களை நோக்கி வீசியதாகவும் இதில் 12 பேர் காயமடைந்ததாகவும் �