“எவ்வித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயார்” – இபிஎஸ் “எவ்வித அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயார்” – எடப்பாடி பழனிச்சாமி

22 July 2021


திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தி இருக்கிறது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.


சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி "திமுக அரசு பொறுப்பேற்று முழுமையாக 90 நாட்கள் முடிவடையாத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக , எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது பொய் வழக்கு தொடுக்கும் நோக்கில் ரெய்டு நடத்தியிருக்கின்றது” என விமர்சித்துள்ளனர்.

மேலும், "திமுக எங்களை அச்சுறுத்த இதை செய்கிறது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும் எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளோம். திமுக அரசு இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். சட்ட பூர்வமாக இதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. அதிமுக ஒரு அரசியல் இயக்கம். ஆட்சி பொறுப்பில் இருக்கும் போது தமிழக மக்களின் ஜீவாதார உரிமைகளை காப்பாற்றும் அரசாக அம்மாவின் அரசு விளங்கியது, இதனை அனைவரும் அறிவர். தமிழக விவசாயிகளை காக்க, காவிரி நடுவர் நீதிமன்ற தீர்ப்பு அரசாணையை பெற்று தந்தவர் ஜெயலலிதாதான். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அதிமுக மக்கள் நலன் அரசாக செயல்பட்டது.” என்று செய்தியாளர் சந்திப்பில் ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் தெரிவித்துள்ளனர்.

மேலும், "எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெறும் ரெய்டு கண்டனத்திற்குரியது. எந்தவித முகாந்தரமும் இல்லாமல் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெறுகிறது” என்றும் கூறியுள்ளனர்.