மேற்கு வங்கப்‌ புலி மம்தா!

03 May 2021

ஜூலை 1993 இல், அவர் இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்த போது, மாநிலச் செயலகத்தின் ரைட்டர்ஸ் கட்டட இயக்கத்தின் போது, 13 இளைஞர்கள் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். 

அந்த நிகழ்வின் போது, மமதாவிற்கும் காயம் ஏற்பட்டது. ஆனால் அதற்கு முன்னர் அதே ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி, நாடியா மாவட்டத்தில் காது கேளாத வாய் பேச முடியாத ஒரு சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை எதிர்த்து, அப்போதைய முதல்வர் ஜோதி பாசுவைச் சந்திக்க, அவரது அறைக் கதவின் முன் ஒரு தர்னாவில் அமர்ந்தார்.

அரசியல் தொடர்புகள் காரணமாகவே குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று மமதா குற்றம்சாட்டினார். அப்போது அவர் மத்திய இணை அமைச்சராக இருந்தார், ஆனால் பாசு அவரைச் சந்திக்கவில்லை.

பாசு வரும் நேரம் பார்த்து, மமதா அமைதியாகவே அமர்ந்திருந்த போதிலும், அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்ற போது அவர் அதற்கு இசையவில்லை. அதனால் அவரையும் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணையும் மகளிர் காவலர்கள் படிக்கட்டுகளில் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். அங்கிருந்து அவர்களை காவல்துறைத் தலைமையிடமான லால் பஜாருக்கு அழைத்துச் சென்றனர்.

இதில், அவர்களின் ஆடைகளும் கிழிந்தன. முதலமைச்சரான பிறகே, நான் மீண்டும் இந்த கட்டடத்தில் காலடி எடுத்து வைப்பேன் என்று அன்று அங்கு மமதா சத்தியம் செய்தார்.

அந்த வைராக்கியத்தில் தொடர்ந்து உறுதியாக இருந்தார். இறுதியாக, 2011ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு கட்டடத்தில் முதல்வராக மீண்டும் நுழைந்தார்.

மமதாவின் அரசியலால் மிகவும் எரிச்சலடைந்த முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசு, அவரது பெயரை ஒருபோதும் பொது வெளியில் குறிப்பிட்டதில்லை. மமதாவை, "அந்தப் பெண்மணி" என்று தான் அவர் குறிப்பிட்டார்.

மமதா பானர்ஜியின் அரசியல் வாழ்க்கை முழுவதும் இது போன்ற பல சம்பவங்களால் நிரம்பியுள்ளது. 1990இல் சிபிஎம் செயல்பாட்டாளரான லாலு ஆலம் தரப்பிலிருந்து இவர் மீது நடத்தப்பட்ட பயங்கர தாக்குதலாகட்டும் அல்லது சிங்கூரில் டாடா நிறுவனத்தின் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு எதிராக 26 நாள் உண்ணாவிரத போராட்டமாகட்டும்.

இவர் கடந்து வந்த பாதை முட்பாதை தான். இதுபோன்ற ஒவ்வொரு சம்பவமும் அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 அன்று மாநிலம் தழுவிய பந்தின் போது, காங்கிரஸின் உத்தரவின் பேரில், ஹாஜ்ரா மோடில், லாலு ஆலம் ஒரு கட்டையால் மமதாவின் தலையில் தாக்கினார்.

இதில், அவரது மண்டை உடைந்த போதிலும், தலையில் ஒரு கட்டுடன், அவர் மீண்டும் சாலையில் போராட்டத்தில் இறங்கினார். மமதாவுடன் நெருக்கமாக அரசியல் பணியாற்றிய சௌகத் ராய் விளக்குகிறார், "மமதா உயிர் பிழைப்பது கடினம் என்று நாங்கள் மனதில் ஏற்றுக்கொண்டு விட்டோம். ஆனால் வாழ வேண்டும் என்ற அவரது இச்சையும் மாநில மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவரது எண்ணமும் தான் அவரைக் காப்பாற்றியது.

'தீதி: தி அன்டோல்ட் மமதா பானர்ஜி' என்ற தலைப்பில் மமதாவின் வாழ்க்கை சரிதையை எழுதிய பத்திரிகையாளர் சுதபா பால், "நாட்டின் மன வலிமை பெற்ற பெண் தலைவர்களில் மமதாவும் ஒருவர் எனறு குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் புத்தகத்தில், "அரசியலில் தனித்துவமான தன்மை மற்றும் போராட்ட குணம் காரணமாக, தீதி தனது வாழ்க்கையில், முன்னர் கற்பனை செய்து கூட முடியாத பல விஷயங்களைச் சாத்தியமாக்கியுள்ளார்.

இடது சாரி அரசாங்கத்தை அரியணையில் இருந்து இறக்குவதும் இதில் அடங்கும். " என்று குறிப்பிட்டுள்ளார்.மமதாவின் அரசியல் பயணம் குறித்த 'டிகோடிங் திதி' என்ற புத்தகத்தை எழுதிய ஒரு பத்திரிகையாளர் டோலா மித்ரா கூறுகையில், "தீதி என்று பிரபலமாக அறியப்படும் மம்தா பானர்ஜி போன்று நாட்டின் வேறு எந்த பெண் தலைவரின் செயல்பாடுகளிலும் மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அதுதான் இவரது கவர்ச்சி அவரது மந்திர ஆளுமை," என்று வியக்கிறார்.

இந்த இரண்டு புத்தகங்களிலும், மமதாவின் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து 2011 ஆம் ஆண்டில் முதல்முறையாக முதல்வராக பதவியேற்றது வரையிலான பயணம் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் சமீரன் பால், "எளிமை மம்தாவின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

அவர் மத்திய அமைச்சராக இருந்தாலும் மாநில முதல்வராக இருந்தாலும், ஒரு வெள்ளை நிறப் பருத்திச் சேலை, சாதாரண ஹவாய் செருப்புடன் தான் இன்றும் இருக்கிறார். "முதல்வரான பிறகும் அவரது உடையில் அல்லது வாழ்க்கை முறையில் எந்த வித்தியாசமும் இல்லை.

தனிப்பட்ட அல்லது பொது வாழ்க்கையில் அவரின் வாழ்க்கை முறை மற்றும் நடத்தை பற்றி எந்த கேள்வியும் கேட்க முடியாது. " என்று கூறுகிறார். பேராசிரியர் பால் விளக்குகிறார், "மம்தாவின் மிகப் பெரிய பண்பு என்னவென்றால், அவர் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் தலைவர்.

சிங்கூரில் விவசாயிகளுக்கு ஆதரவாக தர்ணா மற்றும் உண்ணாவிரதப் போராட்டமாக இருந்தாலும் சரி, நந்திகிராமில் காவல் துறையினரின் தோட்டாக்களுக்கு பலியானவர்களுக்கான போராட்டமாக இருந்தாலும் சரி, களத்தில் இருந்து போராடும் குணம் கொண்டவர் மம்தா."