அமமுக தோல்வி ஏன்?

04 May 2021

அமமுக தோல்வி ஏன்?

எந்த ஓர் இக்கட்டான நிலையிலும் புன்னகையுடன் ஊடகங்களை எதிர் கொள்ளும் தலைவர் என்ற நற்பெயரைப் பெற்றவர் தினகரன் அவர்கள். அவர் மீது அதிமுக வட்டாரத்திலேயே பலருக்கும் வென்று விடுவார் எனும் நம்பிக்கை ஆரம்பகாலத்தில் இருந்தது. இன்று தினகரனின் உடனிருக்கும் பலருக்கும் இந்த நம்பிக்கை கரைந்து கொண்டே வருகிறது. ஏனெனில் அவரின் தொடர் தோல்விகள்தான் அதற்குக்காரணம் என்பதை சொல்லத் தேவையில்லை. ஓர் மாநிலத்திற்கே முதல்வராகும் வாய்ப்பு இருந்தும் அதை அவர் கோட்டை விட்டது எப்படி? என்பதைத்தான் இப்போது நாம் காணப்போகிறோம். 

அரசியல் சதுரங்கத்தில் காய்களை எப்படி நகர்த்துவது எனும் வித்தையில் இவர் தனது போட்டியாளர்களை விட மிகவும் பின் தங்கினார். 

ஆரம்பத்தில் அதிமுகவை  மட்டும் கைப்பற்றுவது என்ற குறிக்கோள் இருந்ததே தவிர, மக்களை எப்படி தன் பக்கம் இழுப்பது என்கிற சூட்சுமம் தெரியவில்லை. ஒன்றறரை கோடி தொண்டர்களுடைய அதிமுக என்பது ஏறத்தாழ தமிழ்நாட்டின் ஓர் குறிப்பிடத்தக்க பலம் கொண்ட மக்கள் தொகையாகும். இவர்களோடு தமிழகத்தின் பொது ஜனங்களையும் சேர்த்து அனைவருக்குமான ஆரோக்கியமான அரசியல் நீரோடையில் பயணிக்கத் தவறினார். 

கெயில் எரிவாயு-ஹைட்ரோ கார்பன் பிரச்சனையிலும், எட்டு வழிச்சாலை எதிர்ப்புப் பிரச்சனையிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக  மக்களோடு மக்களாக தினகரன் பெரிய போராட்டத்தை நடத்தி சிக்ஸர் அடித்திருக்கலாம். 

ஆளுங்கட்சிக்கெதிரான அரசு ஊழியர்கள் போராட்டம் வாரக் கணக்கில் தொடர்ந்த போது அவர்களோடு தோளோடு தோள் கொடுத்து நின்று அவர்களின் கூட்டத்திற்கு நடுவில் அவர்களுக்காக அமர்ந்து, அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவாது ஒரு தொழிற்சங்கத் தலைவர் போன்று போராடியிருந்தால் அரசு ஊழியர்கள் மத்தியில் தினகரன் நெஞ்சை விட்டு நீங்காத இடத்திற்கு சென்றிருப்பார் .

ஸ்டெர்லைட் பிரச்சனையில் மக்களோடு மக்களாக மக்கள் கூட்டத்திற்கு நடுவே உட்கார்ந்து பெரிய அரசியலைச் செய்யும் வாய்ப்பிருந்தும் தவறவிட்டார். 

நீட் பிரச்சனையில் ஒரு நீண்ட போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றிருக்கலாம். இதைச் செய்திருந்தால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆதரவை நிச்சயம் பெற்றிருப்பார். 

பகுதி வாரியாக மக்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் தனது கட்சியின் சார்பாக மிக முக்கியமான நபர்களை பங்கு கொள்ளச் செய்யும் பாங்கினைப் பெறாமல் போனது, அரசுக்கெதிரான பொள்ளாச்சி பாலியல் வழக்கு போன்ற முக்கிய பிரச்சனைகளில் முழுமையாக தன்னை உள்நுழைத்து பெரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காமல் கோட்டை விட்டது முதலானவை  முக்கியமானவை. 

தமிழகமெங்கும் அமமுக பலவீனமாக இருக்கும் வட தமிழகம் மற்றும் மேற்கு மண்டலப் பகுதிகளில் கட்சியைப் பலப்படுத்தும் பணியை முன்னெடுக்காமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது மிகவும் தவறு. 

கட்சியிலிருந்து முக்கியமான நபர்கள் ஒருவர் பின் ஒருவராக சென்று கொண்டிருந்த பொழுது, காரணத்நைக் கண்டறிந்து தன்னைச் சரி செய்து கொள்ளாமலும் அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை சீரிய முறையில் மேற்கொள்ளாமலும் வெறுமனே பத்திரிகை-தொலைக்காட்சி ஊடகங்களுக்கு பேட்டியளித்துக் கொண்டேயிருந்ததை கைவிட்டிருக்கலாம். 

துரோக அரசியல் செய்துவிட்டார்கள் -  அடிமை அரசு என்று சதா காலமும் சொல்லிக்கொண்டே இருந்ததை விட, மக்களுக்குத் தன் மீதும், சசிகலா அவர்கள் மீதும் இருக்கும் தவறான பார்வைக் கண்ணோட்டத்தை மாற்றி தாங்கள் அனைவருக்குமானவர்கள், மக்கள் நல விரும்பிகள் எனும் உண்மையை உணர்த்தும் செயல்பாடுகளை ஒவ்வொரு நாளும் முன்னெடுக்காமல் வீட்டில் முடங்கியே கிடந்தது .

அமமுக எனும் பெயரை கட்சியின் பெயராக வைத்தது யாரையும் ஈர்க்கவில்லை. மக்கள் முன்னேற்றக் கழகம் என்றாவது வைத்திருக்கலாம். இப்படிப் பெயரிலேயே கோட்டை விட்டது .

முழுக்க முழுக்க ட்விட்டர், முகநூல், வாட்ஸ்அப் என்று இணையதளத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்த ஒரே கட்சி அமமுகதான் என்றால் அது மிகையல்ல. ஐடி விங் மட்டுமே கட்சியுமல்ல!.

அனைத்து தரப்பு மக்களும் இணைந்துதான் ஓர் கட்சி எனும் போது குறிப்பிட்ட இனத்தின் மக்களில் ஓர் சிறு பங்கினர் மட்டுமே நம்மை ஆதரிக்கின்றனர் எனும் உண்மையை உணர்ந்து அனைத்து இனத்தவரும் தம்மை நோக்கி வர என்ன வழி என்று சிந்திக்காமல் அது குறித்த அக்கறையின்றி அமைதி காத்தது.

மக்களின் முக்கிய பிரச்சனைகள் மற்றும் மாநில உரிமைகளை மீட்டெடுக்க நீதி மன்றங்களில் தனது கட்சியின் வழக்கறிஞர்கள் அணியை  ஈடுபடுத்தி அவற்றில் வெற்றியோ தோல்வியோ எதுவானாலும் கிடைக்கட்டும் என எண்ணாமல் வேலையில்லாத பட்டதாரி போல வெறுமனே சுற்றியது. 

மாநிலம் முழுவதும் அடிக்கடி சுற்றுப் பயணம் செய்து மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை அவ்வப்போது கேட்டுச் சந்தித்தாவது வந்திருக்கலாம் அதுவுமில்லை.

கொரனா காலத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் நசுங்காத வண்ணம் அவர்களுக்கு கட்சியின் சார்பாக நிவாரணப் பொருட்களை தமிழகமெங்கும் அதிக இடங்களில் பரவலாக வழங்கி ஏழை மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றிருக்கலாம். 

கட்சியின் சார்பாக மருத்துவ அணியைச் சேர்ந்த மருத்துவர்கள் கொண்டு மருத்துவ முகாம்களை நடத்தியிருக்கலாம். 

தமிழ் தேசிய கருத்துக்கள் வலுப்பெறும் காலத்தில் இருந்து கொண்டு அதைப் பற்றிக் கொண்டு படியேறாமல் பிடியை விட்டது.

இந்த நான்கு வருட காலத்தில் நடந்த இடைத் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்புள்ள, நல்ல பெயர் வாங்கிய தகுந்த வேட்பாளர்களை நிறுத்தியிருக்கலாம். பல இடங்களில் வேட்பாளர் குறித்து எவருக்குமே தெரியவில்லை. விளம்பரமும் இல்லை. சரியான பிரச்சாரம், அடிக்கடி கூட்டம், வேட்பாளர்- மக்கள் சந்திப்பு, வீதிக்கு வீதி நடைப் பயணம் என சரியான வழிமுறைகள் எதையும் கையாளாமல் கையாலாகதத் தனமாக இருந்தது.  

மேலும் அவரின் சமூகம் சார்ந்த ஆதரவு முழுமையாக இருக்கும் என்று நம்பப்பட்டது அதுவும் இங்கு பொய்த்துப்போனது .

அவர் வாங்கிய வாக்கு களைப் பார்க்கும் பொழுது  அனைத்து சமூகமும் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது கண்கூடாகத் தெரிகிறது

இன்றும் பல கிராமங்களில் தினகரன் என்றால் யார் என்றே தெரியவில்லை என்பது நிதர்சனம்.

தினகரன்க்கு தென்மாவட்டங்கள் பலம் என்று சொன்னார்கள் அப்பேர்பட்ட மாவட்டங்களில் தினகரன் என்றால் யாருக்கும்  தெரிவதில்லை வயதை கடந்தவர்களுக்கு, பெண்களுக்கு இப்படி ஒரு நபர் யார் என்று இன்றும் தெரியவில்லை என்பதும் உண்மை

இப்படிப் பல காரணங்களை அடுக்கலாம். இனியாவது திருந்துவாரா தினகரன்?

-கொற்றவை நியூஸ் ஆசிரியர் குழு