இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் உணர்வு குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு எவ்வித புரிதலும் இல்லை - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

31 October 2020

மீலாதுன் நபியையொட்டி பாகிஸ்தானில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் இம்ரான் கான், "இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் உணர்வு குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு எவ்வித புரிதலும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இம்ரான் கான், "இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் முகமது நபிகள் மீது கொண்டுள்ள உணர்வு குறித்து மேற்கத்திய நாடுகளை சேர்ந்த மக்களுக்கு எவ்வித புரிதலும் இல்லை. இது முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் தலைவர்களின் தோல்வியாகும். உலகம் முழுவதும் நிலவி வரும் இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலை குறித்து பேசுவது அவர்களது கடமை. தேவைப்பட்டால் இந்த பிரச்சனையை நானே சர்வதேச அளவில் குரல் எழுப்புவேன்.

இஸ்லாமியவாத எதிர்ப்பு மனநிலையானது, இஸ்லாத்தை பின்பற்றும் சிறிய அளவு மக்கள் தொகையை கொண்ட நாடுகளில் வாழும் முஸ்லிம்களை பாதிக்கிறது. மேற்கத்திய நாடுகளில் இஸ்லாமிய எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், பிரான்சுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து அனைத்து முஸ்லிம் நாடுகளும் கலந்து பேசி முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்று நான் கோரி உள்ளேன். கருத்துச் சுதந்திரத்துக்கும் ஒரு எல்லை உண்டு. அது மற்றவர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது” என்று கூறினார்.


முன்னதாக முகம்மது நபி குறித்து கேலி சித்திரங்களை வெளியிட்ட பத்திரிகைக்கு ஆதரவாகவும் இஸ்லாமியர்களை விமர்சித்தும் பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இஸ்லாமியர்களை அவமதிக்கும் வகையில் இம்மானுவேல் மேக்ரான் நடந்து கொள்வதாகவும் இம்ரான் கான் விமர்சித்திருந்தார்.