தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். 

15 September 2021

75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை தொடர்ந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
75வது சுதந்திர தினவிழா கொண்டாடங்களை தொடர்ந்து தூய்மை குறித்த தூய்மை உரையாடல், திரவ கழிவு மேலாண்மை குறித்த 100 நாள் விழிப்புணர்வு பிரச்சாரம் என பல்வேறு வகையில் மக்களிடையே தூய்மை குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைகளின் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள சுவர்களில் "தூய்மை பாரதம்” தொடர்பான சுவர் ஓவியம் வரைதல், சமுதாயத்திற்கு சுத்தம் மற்றும் சுகாதாரம் குறித்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் அக்டோபர் 2021 அன்று சிறப்பு கிராம சபை நடத்துதல் போன்ற தூய்மை பாரத இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் சுகாதார சீர்கேட்டினால் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள சுகாதாரத்தை பேணி காப்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக்கொண்டார். 

முன்னதாக,செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு திரை வாகனத்தின் மூலம் தூய்மை பாரத நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு குறும்படம் மாவட்டம் முழுவதும் மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற வகையில் திரையிடப்படவுள்ளது. அந்தவகையில், இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் இவ்விழிப்புணர்வு வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து பார்வையிட்டார். 

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், உதவி திட்ட அலுவலர் தமிழ்மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

கி.இரவி
திருவாரூர் மாவட்ட செய்தியாளர்.