பத்மஸ்ரீ விருதுக்கு தவில் இசைக் கலைஞர் ஏ.வி.முருகையன் தேர்வு

26 January 2022

புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக்கலைஞர் ஏ.வி. முருகையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது, பாரம்பரிய இசையை கற்க வருவோருக்கு ஊக்கம் தரும் என்று குறிப்பிட்டார்.புதுச்சேரி மடுகரை அடுத்த விழுப்புரம் கொங்கம்பட்டுவைச் சேர்ந்தவர் முருகையன் (58) . தனது தந்தை விவேகானந்தத்திடம் தவில் கற்கத் தொடங்கினார். குடும்பத்தில் மூன்றாவது குழந்தையான இவருக்கு தவில் மீது தீராத ஆர்வம். இவரது குரு வளையப்பட்டி பத்மஸ்ரீ சுப்ரமணியத்திடம் முழு கலையை கற்றார்.தொடர்ந்து இசை நிகழ்வுகள் வாசிக்கத் தொடங்கினார். புதுச்சேரியில் இடம் பெயர்ந்து வசிக்கத் தொடங்கினார். தற்போது விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக உள்ளார்.முன்னோடி இசைக்கலைஞர்களான சூலமங்கலம் சகோதரிகள் உள்ளிட்டோருக்கு தவில் வாசித்துள்ளார். அகில இந்திய வானொலியில் ஏ பிளஸ் கிரேட் கலைஞராக உள்ளார். வெளிநாடுகளுக்குச் சென்று இசைக்கச்சேரிகளை இசைத்த இவர் தமிழக அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் இவர், குரு-சிஷ்ய பரம்பரையில் இலவசமாக 250க்கும் மேற்பட்டோருக்கு தவில் வாசிக்க கற்று தந்துள்ளார். அத்துடன் அரசு இசைப்பள்ளியில் 23 ஆண்டு பணியில் 300க்கும் மேற்பட்டோரை உருவாக்கியுள்ளார்.தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தவில் இசைக்கு பத்மஸ்ரீ கிடைத்துள்ளது தொடர்பாக முருகையன் கூறுகையில், "குருவுக்கு சமர்ப்பணம். "தவில் பரதம்" என்ற புதுமையான நிகழ்வு நடத்தியது தொடங்கி குடியரசுத்தலைவர் மாளிகையில் அப்துல் கலாம் முன்பாக இசைத்தது வரை பல நினைவுகள் உண்டு. இந்த விருது தமிழ் இசைக்கு ஊக்கம் தரும். நம் பாரம்பரிய இசையை அடுத்தத் தலைமுறை கலைஞர்கள் கற்கவும், புதிதாக கற்க வருவோருக்கும் இவ்விருது நிச்சயம் ஊக்கம் தரும்" என்று குறிப்பிட்டார்.